அங்கீகரிக்கப்பட்ட குடியிருப்பு பகுதிகள் பேரூராட்சியுடன் இணைக்க எதிர்பார்ப்பு

கும்மிடிப்பூண்டி, கும்மிடிப்பூண்டி பேரூராட்சியுடன், பெத்திக்குப்பம் மற்றும் புதுகும்மிடிப்பூண்டி ஊராட்சிகள் இணைக்கும் அறிவிப்பை அரசு வெளியிட்டிருந்தது.

இந்நிலையில், பேரூராட்சி எல்லையையொட்டி, தேர்வழி ஊராட்சிக்கு உட்பட்ட, கோட்டக்கரை நேதாஜி நகர், பிரித்வி நகர், குமரன் நகர், குருசந்திரா நகர், ஏ.வி.எம்., நகர், அக் ஷ்யா கார்டன், ஆதித்யா கார்டன், அம்மன் நகர் ஆகிய அரசு அங்கீகாரம் பெற்ற வீட்டுமனை குடியிருப்பு பகுதிகளை இணைக்க வேண்டும் என, பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இது குறித்து அவர்கள் கூறியதாவது:

ஊராட்சி நிர்வாகத்தின் கீழ் வருவதால், அடிப்படை வசதிகளில் பின்தங்கி இருக்கிறோம். சரியான சாலை வசதி, கால்வாய் வசதி கிடையாது.

முறையாக தினசரி குப்பையை சேகரிப்பது கிடையாது. பேரூராட்சிக்கு நிகரான மக்கள் தொகை கொண்டிருப்பதால், எங்களின் அடிப்படை தேவைகளை ஊராட்சி நிர்வாகத்தால் ஈடு செய்ய முடியாத நிலையில் தவித்து வருகிறோம்.

இதனால் மக்களின் சுகாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது. எங்கள் பகுதிகளை மட்டும் கும்மிடிப்பூண்டி பேரூராட்சியுடன் இணைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement