இன்று தற்செயல் விடுப்பு போராட்டம் ஜாக்டோ - ஜியோ அறிவிப்பு

சென்னை : ''கோரிக்கைகளை நிறைவேற்ற, அரசு கால அவகாசம் கேட்டது. அதை வழங்க முடியாது என்பதால், இன்று தற்செயல் விடுப்பு போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம்,'' என, ஜாக்டோ - ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் சீனிவாசன் தெரிவித்தார்.

நேற்று இரவு அவர் அளித்த பேட்டி:



அமைச்சர்களுடன் காலை நடத்திய பேச்சு அடிப்படையில், முதல்வரோடு, அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் மாலை பேசினர். அதன்பின் கோரிக்கைகளை நிறைவேற்ற, நான்கு மாத அவகாசம் கேட்டனர். அதுவரை போராட்டத்தை ஒத்தி வைக்க வேண்டும் என்றனர்.


இது குறித்து ஒருங்கிணைப்பாளர்கள் கூடி ஆலோசித்தோம். நான்கு ஆண்டுகளாகியும், கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை. இனிமேலும் கால அவகாசம் தர முடியாது. எனவே, இன்று திட்டமிட்டபடி போராட்டம் தொடரும். அனைத்து அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தற்செயல் விடுப்பு எடுப்பர். மாவட்டத் தலைநகரங்களில், காலையில்ஆர்ப்பாட்டம் நடக்கும்.



தொடர்ந்து போராட்டத்தை முன்னெடுத்து செல்வதற்கு முன்பாக, அரசு கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். இன்று நடக்க இருந்த மறியல் போராட்டம், ஆர்ப்பாட்டமாக நடக்கும். அரசு எங்கள் கோரிக்கைகளை நிராகரிக்கவில்லை. அவகாசம் கேட்டுள்ளனர்.



ஊழியர்களின் உணர்வுக்கு மதிப்பளித்து, போராட்டத்தை முன்னெடுக்கிறோம். இன்று ஆர்ப்பாட்டம் முடிந்த பிறகு, ஒருங்கிணைப்பாளர்கள் கூடி, அடுத்த கட்ட போராட்டத்தை முடிவு செய்வோம். அதற்கு முன்பு, அரசு நல்ல முடிவை அறிவிக்கும் என நம்புகிறோம்.

இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement