யானை தாக்கி தொழிலாளி பலி
ஹாசன்: பேலுாரின் பாதனே கிராமத்தில் காட்டு யானை தாக்கியதில் எஸ்டேட் தொழிலாளி உயிரிழந்தார்.
ஹாசன், பேலுாரின் குஜகனஹள்ளி கிராமத்தில் வசித்தவர் அனில், 28. இவர் பாதனே கிராமத்தில் உள்ள அண்ணாமலை எஸ்டேட்டில் வேலை செய்தார். இவர் நேற்று மாலை எஸ்டேட்டில் பணி முடிந்து, வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.
கிராமத்தின் அருகில் செல்லும் போது, திடீரென எதிரே வந்த காட்டு யானை, அவரை தாக்கி தும்பிக்கையால் துாக்கி வீசி, மிதித்து கொன்றது.
தகவலறிந்து அங்கு வந்த வனத்துறையினர் சம்பவ இடத்தை பார்வையிட்டனர்.
இப்பகுதியில் காட்டு யானைகளின் தொந்தரவு மிகவும் அதிகம். தோட்ட பணிகளுக்கு செல்லும் விவசாயிகள், தொழிலாளர்கள் உயிரை கையில் பிடித்தபடி செல்லும் சூழ்நிலை உள்ளது. இப்பிரச்னைக்கு தீர்வு காண்பது எப்போது என, கிராமத்தினர் வனத்துறையினரிடம் கேள்வி எழுப்பியுள்ளனர்.
அரேஹள்ளி போலீசார் விசாரிக்கின்றனர்.