கிரேட்டர் பெங்களூரு நிர்வாக மசோதா தொடர்பான அறிக்கை தாக்கல்

பெங்களூரு: கிரேட்டர் பெங்களூரு மசோதா தொடர்பான, ஆய்வு அறிக்கையை சட்டசபை இணை கமிட்டி தலைவர் ரிஸ்வான் அர்ஷத் தலைமையில், சபாநாயகர் காதரிடம் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதா பட்ஜெட் கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படும் வாய்ப்புள்ளது.

பெங்களூரு மாநகராட்சி நிர்வாகத்தை சுமுகமாக நடத்தும் நோக்கில், மாநகராட்சியை இரண்டாக அல்லது மூன்றாக பிரிக்க, காங்கிரஸ் அரசு ஆலோசித்தது. இதற்கு வசதியாக 'கிரேட்டர் பெங்களூரு நிர்வாக மசோதா - 2024' வகுத்தது, இதனை மழைக்கால கூட்டத்தொடரில் தாக்கல் செய்தது.

ஆட்சேபனை



மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் ஆட்சேபனை தெரிவித்தன. விவாதிக்க வேண்டும் என, பிடிவாதம் பிடித்தன. சாதக, பாதகங்களை ஆய்வு செய்ய, சட்டசபை இணை கமிட்டி அமைக்கும்படி எம்.எல்.ஏ.,க்கள் வலியுறுத்தினர்.

இதை ஏற்று கொண்ட சபாநாயகர் காதர், சிவாஜி நகர் காங்., எம்.எல்.ஏ., ரிஸ்வான் அர்ஷத் தலைமையில், சட்டசபை இணை கமிட்டி அமைத்தார். இக்கமிட்டி மசோதா குறித்து விரிவாக ஆய்வு செய்துள்ளது.

பெங்களூரின் விதான்சவுதாவில் சபாநாயகர் காதரிடம், கமிட்டி தலைவர் ரிஸ்வான் அர்ஷத் தலைமையில், நேற்று மதியம் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. கமிட்டி உறுப்பினர்கள் சோமசேகர், சீனிவாஸ் உட்பட பலர் இருந்தனர்.

அறிக்கையில் பல்வேறு சிபாரிசுகள் செய்யப்பட்டுள்ளன. பட்ஜெட் கூட்டத்தொடரில், கிரேட்டர் பெங்களூரு மசோதா தாக்கல் செய்யப்படும் வாய்ப்புள்ளது.

அறிக்கை தாக்கல் செய்த பின், கமிட்டி தலைவர் ரிஸ்வான் அர்ஷத் அளித்த பேட்டி:

ஆய்வு கமிட்டி ஏற்கனவே, அனைத்து கட்சி எம்.எல்.ஏ.,க்களிடம் இருந்தும் கருத்து கேட்டறிந்துள்ளது. கடந்த வாரம் பொது மக்களிடமும் ஆலோசனை கேட்கப்பட்டது. நிர்வாகத்தை எளிதாக்கும் வகையில், பெங்களூரு மாநகராட்சியை இரண்டு முதல் ஏழு சிறிய மாநகராட்சிகளாக பிரிக்க வேண்டும் என, சிபாரிசு செய்துள்ளோம்.

சிபாரிசு



சிறிய மாநகராட்சியாக இருந்தால், சிறப்பாக நிர்வகிக்க முடியும். மக்களுக்கு சிறப்பான வசதிகள் செய்யவும், நிர்வகிப்பை எளிதாக்கவும் உதவியாக இருக்கும். ஒரே முறையில் ஏழு மாநகராட்சிகள் அமைக்க வேண்டும் என, கூறவில்லை. சூழ்நிலைக்கு தகுந்தபடி அரசு முடிவு செய்ய வேண்டும் என, சிபாரிசு செய்துள்ளோம்.

அறிக்கையை சபாநாயகரிடம், தாக்கல் செய்துள்ளோம். மசோதா தொடர்பாக, பல்வேறு இடங்களில் ஆலோசனை கூட்டங்கள் நடத்தினோம். சட்ட வல்லுனர்கள், பெங்களூரு நகர் வல்லுனர்களிடமும் கருத்துகள் கேட்டறிந்தோம்.

நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு, பெங்களூரு அதிக பங்களிப்பை அளிக்கிறது. பலரின் கனவு நகராகும்.

மக்களுக்கு தேவையான வசதிகளை செய்ய திட்டங்கள் வகுக்க வேண்டும். ஒரே மாநகராட்சியால், வளர்ச்சி பணிகளை செய்வது கஷ்டம். பொது மக்களும் மாற்று ஏற்பாடு வேண்டும் என, ஆலோசனை கூறினர்.

தற்போது பெங்களூரு மாநகராட்சி, 870 சதுர கி.மீ., பரப்பளவு கொண்டு உள்ளது. மக்கள் தொகை 1.51 கோடியாக உள்ளது. நகர வளர்ச்சி தொடர்பான வெவ்வேறு துறைகள் இடையே, ஒருங்கிணைப்பு இல்லை. ஒருங்கிணைப்பு ஏற்படுத்த கிரேட்டர் பெங்களுரு ஆணையம் அவசியம். சட்டசபை தொகுதி வாரியாக, 'கலந்தாலோசனை கமிட்டி' அமைக்க வேண்டும்.

சிறிய மாநகராட்சிகள் அமைத்து, ஒவ்வொரு மாநகராட்சிக்கும் கணக்கு தணிக்கை; மேயர் பதவி காலம், 30 மாதங்கள்; ஊழலுக்கு கடிவாளம் போட வேண்டும் என, சிபாரிசு செய்துள்ளோம்.

தலைவர்



கிரேட்டர் பெங்களூரு நிர்வாக ஆணைய தலைவராக முதல்வரும், துணைத்தலைவராக பெங்களூரு நகர வளர்ச்சி துறை அமைச்சரும் இருப்பர். இப்போதைய மெட்ரோ, குடிநீர் வாரியம், பி.டி.ஏ., இருப்பது போன்று செயல்படும்.

மாநகராட்சியை பிரிக்கும் போது, வருவாயை கணக்கில் கொண்டு, பிரிக்க வேண்டும். வருவாய் பாதிப்பு ஏற்படாமல் பார்த்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு மாநகராட்சியிலும், 100 முதல் 125 வார்டுகள் இருக்க வேண்டும்.

மாநகராட்சிக்கு காலா காலத்துக்கு தேர்தல் நடத்துவது அவசியம். புதிய மாநகராட்சிகளுக்கு, பெங்களூரு தெற்கு, பெங்களூரு கிழக்கு, பெங்களூரு மேற்கு என பெயர்கள் இருக்க வேண்டும். கமிட்டியில் உள்ள பா.ஜ., உறுப்பினர்களும் ஆலோசனை கூறியுள்ளனர். அனைவரும் அறிக்கையில் கையெழுத்திட்டுள்ளனர்.

இதற்கு முன் மாநகராட்சியின் வருவாய், கிரேட்டர் பெங்களூரு ஆணையத்தில் சேரும் அம்சம் இருந்தது.

இதற்கு, பா.ஜ.,வினர் ஆட்சேபனை தெரிவித்தனர். அந்தந்த மாநகராட்சிக்கு வருவாய் நேரடியாக செல்ல வேண்டும் என்றனர். அதன்படியே சிபாரிசு செய்துள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

கடந்தாண்டு ஜூலையில் நடந்த சட்டசபை கூட்டத்தில், கிரேட்டர் பெங்களுரு நிர்வாக மசோதா தாக்கல் செய்யப்பட்டது. மசோதாவின் சாதகம், பாதகங்கள் குறித்து ஆலோசிக்க வேண்டும் என, உறுப்பினர் கள் வலியுறுத்தினர். எனவே எம்.எல்.ஏ., ரிஸ்வான் அர்ஷத் தலைமையில், கமிட்டி அமைக்கப்பட்டது. கமிட்டி நேற்று அறிக்கை தாக்கல் செய்துள்ளது. வரும் பட்ஜெட்டில், அறிக்கை தாக்கல் செய்யப்படும்.

-யு.டி.காதர், சபாநாயகர்

Advertisement