இளைஞர் காங்., உறுப்பினர்களாக தி.மு.க.,வினர்; அமைச்சர்கள் தயவால் அரங்கேறிய தில்லுமுல்லு



தமிழக இளைஞர் காங்கிரஸ் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவாக, புதிய உறுப்பினர்கள் சேர்க்கை பணியில் தி.மு.க., அமைச்சர்கள் மறைமுக உதவி செய்த விவகாரம் குறித்து, டில்லி மேலிடம் விசாரணை நடத்த உள்ளது.


கடந்த மாதம் 18ம் தேதி முதல், தமிழக இளைஞர் காங்கிரஸ் உறுப்பினர்கள் சேர்க்கை, இளைஞர் காங்கிரஸ் மொபைல் போன் செயலி வழியாக நடந்து வருகிறது.

எம்.பி.,க்கு எதிராக



உறுப்பினர்கள் சேர்க்கைப் பணி, நாளை மறுதினம் நிறைவடைய உள்ளது. அதிக உறுப்பினர்களை சேர்த்து, முதல் இடத்தை பிடிப்பவருக்கு, தலைவர் பதவி வழங்கப்பட உள்ளது.


அதைத் தொடர்ந்து, 13 துணைத் தலைவர்கள், 34 பொதுச்செயலர்கள், 78 மாவட்ட தலைவர்கள், 234 சட்டசபை தொகுதி தலைவர்கள், நகர, வட்டார தலைவர்கள் பதவிகளுக்கு தேர்தல் நடக்க உள்ளது.


தேர்தலுக்காக, மாவட்டங்கள் ஏழு மண்டலங்களாக பிரிக்கப்பட்டு, புதிய உறுப்பினர்கள் சேர்க்கை நடந்து வருகிறது. நேற்று வரை, 3.30 லட்சம் பேர் உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டு உள்ளனர்.


கரூர் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் பதவிக்கு கீர்த்தன் போட்டியிடுகிறார். இந்த மாவட்டத்தில், 20,000 உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.



கரூர் தொகுதி காங்கிரஸ் பெண் எம்.பி.,க்கும், அப்பகுதியைச் சேர்ந்த தி.மு.க., அமைச்சருக்கும் ஆகாது. எனவே, எம்.பி.,க்கு எதிராக உள்ள கீர்த்தன் வெற்றி பெற, புதிய உறுப்பினர்கள் சேர்க்கைக்கு மறைமுகமாக உதவி செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.

மறைமுக உதவி



இளைஞர் காங்., மாநில தலைவர் பதவியைக் கைப்பற்ற, தினேஷ் என்பவர் தீவிர உறுப்பினர் சேர்க்கை நடத்தி வருகிறார். இவர், ஆந்திர மாநில காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் மாணிக் தாகூரின் ஆதரவாளர்.



தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த தமிழக காங்கிரஸ் பொதுச்செயலரான, பட்டுக்கோட்டை மகேந்திரனின் உறவினர்.



எனவே, பட்டுக்கோட்டை மகேந்திரனுக்கு நெருக்கமான தி.மு.க., - எம்.எல்.ஏ., ஒருவரின் வாயிலாக, இளைஞர் காங்கிரசில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.



மாநில தலைவர் பதவிக்கு போட்டியிடும் சூரியபிரகாசுக்கு ஆதரவாக, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை ஆதரவாளர்கள், புதிய உறுப்பினர்கள் சேர்க்கையில் தீவிரம் காட்டியுள்ளனர்.



மாநில தலைவர் பதவிக்கு போட்டியிடும் அருண் பாஸ்கர், தி.மு.க.,வின். 'ஐபேக்' நிறுவனத்தில் பணியாற்றியவர். அவருக்கு, பல்லாவரம் சட்டசபை தொகுதி தி.மு.க., முக்கிய புள்ளி மறைமுகமாக உதவி புரிந்துள்ளார்.

விசாரணை



விருதுநகர் மாவட்டத்தில், தி.மு.க., அமைச்சர் பரிந்துரையில், மகளிர் அணி தி.மு.க., நிர்வாகிகள், இளைஞர் காங்கிரஸ் உறுப்பினர் சேர்க்கைக்கு பணியாற்றி உள்ளனர். இளைஞர் காங்கிரஸ் தேர்தலில், உண்மையான முறையில் காங்கிரஸ் தொண்டர்களை சேர்ப்பதற்கு பதிலாக, தி.மு.க., உறுப்பினர்களை போலியாக சேர்த்து, முறைகேடு நடத்தப்பட்டுள்ளது.



எனவே, 'ஆன்லைன்' தேர்தலை நிறுத்த வேண்டும்; ஓட்டுச்சீட்டு முறையில் தேர்தல் நடத்த வேண்டும் என, டில்லி மேலிடத்திற்கு புகார் அனுப்பப்பட்டுள்ளது.



இதுகுறித்து விசாரிப் பதற்காக, டில்லி மேலிடம், வேட்பாளர்கள் சிலரை டில்லிக்கு அழைத்துள்ளது. விசாரணை முடிந்த பின்னரே, மீண்டும் இளைஞர் காங்கிரசுக்கு ஆன்லைன் வாயிலாக தேர்தல் நடத்தப்படுமா அல்லது நிறுத்தி வைக்கப்படுமா என்பது தெரியவரும்.





- நமது நிருபர் -

Advertisement