குகைக்குள் கேசவநாதேஸ்வரர்

உடுப்பி, குந்தாபுராவில் உள்ள கேரடி கிராமத்திற்கு அருகில் உள்ள மூடகல்லு பகுதியில் உள்ளது ஸ்ரீ கேசவநாதேஸ்வரா குகைக் கோவில். பெயருக்கு ஏற்றாற் போல கோவில், குகைக்கு அடியில் உள்ளது.

இந்த கோவிலுக்கு வரும் பக்தர்கள் ஒரு புதுவித அனுபவத்தை பெறுவதாக கூறுகின்றனர். காலை 9:00 மணி முதல் மாலை 5:30 மணி வரை திறந்து இருக்கும். கோடைக்காலம், மழைக்காலம் என அனைத்து காலங்களிலும் குகையில் நீர் வற்றாமல் இருப்பது அதிசயமாக பேசப்படுகிறது. சிவபெருமானின் அவதாரமான கேசவநாதேஸ்வரர் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.

தண்ணீரில் தரிசனம்



இந்த தண்ணீரில் மீன்களும் உள்ளன. இந்த நீரில் நின்றுக்கொண்டே தெய்வத்தை தரிசிக்க முடியும். அப்போது, தண்ணீரில் உள்ள மீன்கள் பக்தர்களின் கால்களை உரசி செல்கின்றன. இது சற்று வித்தியாசமான அனுபவமாக உள்ளது என பக்தர்கள் கூறுகின்றனர்.

இந்த கோவிலின் இயற்கை அமைப்பு சூப்பராக உள்ளது. கோவிலை சுற்றியுள்ள பாறைகள், பறவைகள் எழுப்பும் ஒலிகள் என அனைத்தும் மனதை அமைதிப்படுத்துகிறது. இக்கோவிலில் இருந்து சூரிய உதயம், மறைவு போன்ற காட்சிகளை கண்டு ரசிக்க முடியும்.

இக்கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. வார இறுதி நாட்களில் அதிக அளவில் வருகை தருகின்றனர். குறிப்பாக, ஆந்திராவிலிருந்து அதிக எண்ணிக்கையில் வருகின்றனர். இவர்களின் வாகனங்களை நிறுத்துவதற்கு தனி வசதி செய்யப்பட்டு உள்ளது.

புராண கதைகள்



இக்கோவிலுக்கு பல புராண கதைகள் உள்ளன. முன்பு ஒரு காலத்தில் பூமியில் உயிர்களை உருவாக்குவதில் தேவர்கள் இடையே பிரச்னை எழுந்து உள்ளது. இதை தீர்ப்பதற்கு சிவபெருமான் பூமிக்கு வந்து உள்ளார். மூட்கல்லு பகுதியில் ஒரு குகையினுள் தியானத்தை துவங்கி உள்ளார். இறுதியில், அந்த இடத்திலேயே கேசவநாதராக தோன்றி உள்ளார்.


இதை அறிந்த தேவர்கள், சிவனை வழிபட வந்து உள்ளனர். சிவலிங்கத்தை தொடுவது மரியாதையான செயல் இல்லை என்று கருதி, சிவலிங்கத்தை குகைக்குள் மறைத்து விட்டு, தற்காலிகமாக 'உத்பவ லிங்கம்' ஒன்றை உருவாக்கி வழிபட துவங்கி உள்ளனர். இந்த லிங்கத்தை வழிபட்டால், குகைக்குள் இருக்கும் லிங்கத்தை வழிபடுவதற்கு சமம் என பரவசப்பட்டனர்


- நமது நிருபர் -.

Advertisement