பெண் தொழிலாளர்களை விமானத்தில் சுற்றுலா அழைத்து சென்ற விவசாயி

பெங்களூரு: தன்னிடம் விவசாய கூலியாட்களாக பணியாற்றும் பெண்களை, ஷிவமொக்காவில் இருந்து, கோவாவுக்கு சுற்றுலா அழைத்து சென்ற விவசாயியிக்கு பாராட்டு குவிந்தது.
விஜயநகரா, ஹரப்பனஹள்ளியின் சிரகனஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி விஸ்வநாத். மாநில உளவுத்துறையில் ஏட்டாக பணியாற்றிய இவர், அந்த பணியை விட்டு விட்டு தனக்கு சொந்தமான 14 ஏக்கர் பாக்கு தோட்டத்தில் விவசாயத்தில் ஈடுபட்டார்.
இவரது தோட்டத்தில், பெண்கள் கூலி வேலை செய்கின்றனர். நிரந்தரமாக தன் தோட்டத்தில் பணியாற்றும் பெண்களுக்கு, ஏதாவது பரிசு கொடுக்க வேண்டும்; அது மறக்க முடியாத பரிசாக இருக்க வேண்டும் என, விஸ்வநாத் விரும்பினார்.
ஏழைகளுக்கு ஒரு முறையாவது, விமானத்தில் பறக்க வேண்டும் என்ற கனவு இருக்கும். ஆனால் பண வசதி இருக்காது. எனவே பெண் தொழிலாளர்களை, விமானத்தில் அழைத்து சென்று மகிழ்ச்சிப்படுத்த முடிவு செய்தார்.
அதன்படி சில நாட்களுக்கு முன், அனைவரையும், ஷிவமொக்கா விமான நிலையத்தில் இருந்து, கோவாவின், தாபோலிமுக்கு விமானத்தில் சுற்றுலா அழைத்து சென்றிருந்தார்.
இது குறித்து, விஸ்வநாத் கூறியதாவது:
என் தோட்டத்தில் பணியாற்றும் பெண் தொழிலாளர்களின் கனவை, நனவாக்கிய திருப்தி எனக்குள்ளது. விமானத்தில் பறக்க வேண்டும் என்ற, அவர்களின் விருப்பத்தை நிறைவேற்றினேன்.
முதலில் திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க, விமானத்தில் அழைத்து செல்ல ஆலோசித்தேன். ஆனால் விமான கண்காட்சி நடந்ததால், என் திட்டத்தை மாற்றினேன். நாங்கள் கோவாவுக்கு சென்றோம். ஷிவமொக்கா அருகில் உள்ள விமான நிலையம் என்பதால், அங்கிருந்து புறப்பட்டோம்.
முதல் முறை விமானத்தில் ஏறிய பெண்கள், விமானம் டேக் ஆப் ஆகும் போது பயந்தனர். ஆனால் சுற்றுலா முடிந்து திரும்பும் போது, அவர்களிடம் பயம் இல்லை. மகிழ்ச்சியாக இருந்தனர்.
நாங்கள் கோவாவின், காலங்குட், பாகா கடற்கரைக்கு சென்றோம். மான்டோபி ஆற்றில் படகு சவாரி செய்தோம். பனாஜி நகருக்கும் சுற்றுலா சென்றோம். அவர்களின் முகத்தில் மகிழ்ச்சியை கண்டு, எனக்கும் மகிழ்ச்சியாக இருந்தது.
ஏட்டாக பணியாற்றி, விவசாயி ஆனதில் எனக்கு திருப்தி அளிக்கிறது. நான் விவசாயியான பின், ஆரோக்கியமான, நெருக்கடி இல்லாத வாழ்க்கை நடத்துகிறேன்.
இவ்வாறு கூறினார்.
மேலும்
-
குழந்தைக்கு பாலியல் துன்புறுத்தல்; 16 வயது சிறுவன் கைது
-
பஸ் வசதி இன்றி மாணவர்கள் அவதி
-
செயற்கை தடகள டிராக்கில் ரப்பர் துகள்கள் ஒட்டும் பணி
-
கிராமமா... நகரமா... வாழ்விடம் தெரியாமல் வசிக்கும் மக்கள்: அனுப்பானடி தாய்நகர் குடியிருப்போர் அவலம்
-
சமயநல்லுாரில் ரயில்வே கேட் அவதி
-
வங்கக்கடலில் நிலநடுக்கம்! கோல்கட்டாவில் உணரப்பட்ட அதிர்வுகள்