1,200 ஆண்டு பழமையான லட்சுமி நரசிம்மர் கோவில்

மாண்டியா மாவட்டம் மலவள்ளியின் மாரேஹள்ளியில் அமைந்து உள்ளது 1,200 ஆண்டுகள் பழமையான ஸ்ரீ லட்சுமி நரசிம்மசுவாமி கோவில். சோழர் கட்டட கலைக்கு சிறந்த எடுத்துக்காட்டுகளில் ஒன்றாகும். இது கர்நாடகாவில் உள்ள மிக முக்கியமான நரசிம்மர் கோவில்களில் ஒன்றாகும்.

காக்கும் கடவுள்



கர்நாடகாவில் ஒவ்வொரு ராஜ வம்சத்தினரும், நரசிம்மரை காக்கும் கடவுளாக வணங்கி, கலாசாரத்தை வளர்ப்பதில் காரணமாக இருந்துள்ளனர்.

கர்நாடகாவில் உள்ள நுாற்றுக்கணக்கான பழமையான நரசிம்மர் கோவில்களில், மாரேஹள்ளியின் ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் கோவில், தனக்கென சிறந்த இடத்தை பிடித்து உள்ளது.

மழை காலம் முடிந்த பின், இக்கோவிலுக்கு வந்தால், பழமையான மற்றும் பசுமை போர்வை போர்த்தியது போன்று, புதிதாக கட்டப்பட்ட கோவிலாக காட்சி அளிக்கும். கோவில் முன் கால்வாயில் பாயும் காவிரி நீர் மின்னுவது, கோவிலின் அழகை மேலும் கூட்டுகிறது.

ராஜராஜ சோழன் காலத்தில், இக்கோவில் முதன் முதலாக சீரமைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. தற்போது இந்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இக்கோவில் 10ம் நுாற்றாண்டில் கட்டப்பட்டதாக, கல்வெட்டுகள் கூறுகின்றன.

முனிவர்கள் தவம்



உள்ளூர் மக்களின் கூற்றுப்படி, 'முன்னொரு காலத்தில் இந்த இடத்தில் சுயக்ஞர், வம்பகர்ணர் என இரு முனிவர்கள் கடும் தவம் மேற்கொண்டனர். இவர்களின் தவத்தால், நரசிம்மர் மகிழ்ச்சி அடைந்தார். இரவில் முனிவர்களின் கனவில் தோன்றிய நரசிம்மர், தன் பக்தர்களை ஆசிர்வதிக்க, முனிவர்களுடன் இதே இடத்தில் வசிப்பேன் என்று கூறினாராம்.

வேத காலத்தில் இப்பகுதி கஜாரண்ய ஷேத்திரம் என்று அழைக்கப்பட்டது. கோவிலின் பிரதான தெய்வமான லட்சுமி நரசிம்ம சுவாமியை, 'முதுகப்பா' என்றும், 'சவுமிய நரசிம்ம சுவாமி' என்றும் அழைக்கப்படுகிறார்.

நான்கு கைகளுடன் வீற்றிருக்கும் நரசிம்மரின் இடது தொடையில் மகாலட்சுமி அமர்ந்திருக்கிறார். அமைதியான மனநிலையில் நரசிம்மர் அருள்பாலிக்கிறார். மகாலட்சுமியின் தாமரை பாதங்களுக்கு கீழ், ஒரு அம்ருத கலசம் உள்ளது.

ஒருமுறை திறப்பு



கோவில் வளாகத்துக்குள் நுழையும் போது, வலது புறத்தில் சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட அமிர்தேஸ்வர் கோவில் உள்ளது. இக்கோவில் ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே திறக்கப்படுகிறது. இருப்பினும், பக்தர்கள், சாவி துவாரத்தின் வழியாக, பார்க்கும் போது, சிவலிங்கம் வடிவில் காட்சி அளிப்பார்.

ராஜகோபுரத்தில் நுழைந்தவுடன், கோவிலை நோக்கி செல்லும் போது, இடது புறத்தில் ஹனுமனுக்கு சன்னிதியும், வலது புறத்தில் விநாயகர் சன்னிதியும் உள்ளது.


ஸ்ரீ லட்சுமி நரசிம்ம சுவாமி கோவில், தினமும் காலை 9:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும். ஞாயிற்றுகிழமைகளில் மாலை நேரத்தில் மட்டும் கோவில் திறந்திருக்கும்.

- நமது நிருபர் -

Advertisement