புதிய வழித்தடங்களில் மினி பஸ் இயக்க அனுமதி; 2,000 பழைய பெர்மிட்தாரர்கள் கோரிக்கை

சென்னை : 'தமிழக புதிய மினி பஸ் திட்டத்தில், 2,000 பழைய மினி பஸ் பர்மிட்களுக்கும், முக்கியத்துவம் அளிக்க வேண்டும்' என மினி பஸ் உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.


தமிழக மினி பஸ் திட்டத்தில், பல திருத்தங்கள் செய்யப்பட்டு, புதிய மினி பஸ் திட்டம் உருவாக்கப்பட்டு உள்ளது. இதற்கு தமிழக அரசு, கடந்த மாதம் ஒப்புதல் அளித்தது.


இதையடுத்து, மாநிலம் முழுதும், 91 வட்டார போக்குவரத்து அதிகாரிகள், மாவட்ட நிர்வாக அதிகாரிகள், மினி பஸ்கள் இயக்குவதற்கான வழித்தடங்களை இறுதி செய்து வருகின்றனர்.


தமிழகம் முழுதும், 3,000 வழித்தடங்களில், மினி பஸ்களை இயக்க, மாநில அரசு அனுமதி அளித்துள்ளது. முதல் கட்டமாக, 1,000 வழித்தடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இதில், 'விருப்பம் உள்ளவர்கள் மினி பஸ்களை இயக்கலாம்' என, மாவட்ட வாரியாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.



சென்னையில் குன்றத்துார், பூந்தமல்லி, சோழிங்கநல்லுார், ஆலந்துார் உள்ளிட்ட மண்டலங்களில், அதிக வழித்தடங்கள் தேர்வு செய்யப்பட்டுஉள்ளன.



இதுகுறித்து, மினி பஸ் உரிமையாளர்கள் சிலர் கூறியதாவது:


தமிழகத்தில் மினி பஸ்களை இயக்கும் வகையில், ஏற்கனவே, 3,000 பர்மிட்கள் உள்ளன. இவற்றில், 1,000 பர்மிட்களுக்கு மட்டுமே, மினி பஸ் இயக்கப்படுகிறது.



டீசல், உதிரி பாகங்கள் விலை உயர்வால், பர்மிட் பெற்ற பலர், மினி பஸ்களை இயக்கவில்லை. பல ஆண்டுகளாக, 2,000 பழைய பர்மிட்டுகளை உரிமையாளர்கள் அப்படியே வைத்துஉள்ளனர்.



புதிய மினி பஸ்கள் திட்டத்தில், கூடுதல் கி.மீ., அனுமதி உட்பட பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதனால், ஏற்கனவே பர்மிட் வைத்திருப்போர், புதிய திட்டத்தின் கீழ், மினி பஸ்களை இயக்க ஆர்வம் காட்டி வருகின்றனர். அவர்கள் புதிய வழித்தடம் கேட்கின்றனர்.


அவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். இது தொடர்பாக, தமிழக போக்குவரத்து துறையிடம், கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது. நல்ல முடிவை எதிர்பார்க்கிறோம்.



இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement