ஓடும் ரயிலில் நகை திருடிய போலீஸ்; 'டிவி' நடிகை வாக்குமூலம்

சென்னை: ''ஓடும் ரயிலில் இருந்து கர்ப்பிணி துாக்கி வீசப்பட்ட சம்பவம் போல எனக்கும் நடந்திருக்கும்,'' என, 'டிவி' நடிகை ரேணுகா தெரிவித்தார்.


சென்னை சூளைமேடைச் சேர்ந்தவர் ரேணுகா, 30; 'டிவி' தொடர் நடிகை. இவரிடம், ஓடும் ரயிலில் வைர நகைகள் திருடியது தொடர்பாக, ஓட்டேரி குற்றப்பிரிவு ஆய்வாளரின் வாகன ஓட்டுநராக உள்ள போலீஸ்காரர் வசந்தகுமார், 33, கைது செய்யப்பட்டு உள்ளார்.

'எந்தப் பை'



இவ்வழக்கை விசாரித்து வரும் ரயில்வே இன்ஸ்பெக்டர் சசிகலாவிடம், ரேணுகா வாக்குமூலம் அளித்துள்ளார். பின், நடிகை அளித்த பேட்டி:


என் தாய் ஸ்ரீபா, சித்தி ரேகா, தங்கை வைஷ்ணவி ஆகியோருடன் பெங்களூரு சென்று, காவேரி எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்னைக்கு திரும்பினேன்.


என் கைப்பையில், 6 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வைர நகைகள், கைக்கடிகாரம் இருந்தன.

மிகவும் சோர்வாக இருந்ததால், கைப்பையை தோளில் மாட்டியபடி துாங்கினேன்.



ரயில், அம்பத்துார் - திருமுல்லைவாயல் இடையே வந்த போது, திடீரென யாரோ என் கைப்பையை பிடுங்குவது போல இருந்தது. கண் விழித்து பார்த்தபோது, என் அருகில் நின்ற வாலிபர், என் பையை அவரின் பைக்குள் திணித்து விட்டார்.



'என் பையை கொடுத்து விடுங்கள்' என்று கேட்டேன். ஒன்றுமே தெரியாதது போல, 'எந்தப் பை' என்று கேட்டார்.



உங்கள் பையை கொடுங்கள்; அது எந்தப் பை என நான் காட்டுகிறேன் என்றேன். 'நானே போலீஸ்; நான் எதற்கு உங்கள் பையை எடுக்கப் போகிறேன்' என, கூறி நடித்தார். இது சரிபட்டு வராது என நானும், என் அம்மாவும் அபாய சங்கிலியை பிடித்து இழுத்தோம்.



அப்போது சுதாரித்த அந்த வாலிபர், தன்னிடம் இருந்த பையை ஜன்னல் வழியாக வீசி விட்டார். இதனால், கத்தி கூச்சலிட்டோம்.



சக பயணியரும், ரயில்வே பாதுகாப்பு படை பெண் போலீசாரும் வந்து விட்டனர். அதற்குள், பை வீசப்பட்ட இடத்தில் இருந்து, ரயில் 1 கி.மீ., துாரத்தை கடந்து விட்டது. நகை இருக்கும் அந்த பையை வேறு யாராவது எடுத்து விட்டால் என்ன செய்வது என்ற பதற்றம் தொற்றிக்கொண்டது.


ரயில் நின்றதும், நானும், என் அம்மாவும் 1 கி.மீ., துாரம் சென்று, அந்த வாலிபர் வீசிய பையை எடுத்தோம். அதில், என் நகைகள் பத்திரமாக இருந்தன. அதற்குள் நாங்கள் பயணம் செய்த ரயில் புறப்பட்டு விட்டது.

மன அழுத்தம்



இதனால், அம்பத்துார் ரயில் நிலையம் சென்று, மின்சார ரயில் பிடித்து, சென்ட்ரல் வந்து புகார் அளித்தோம். இச்சம்பவத்தால் மிகுந்த மன அழுத்தத்தில் உள்ளேன்.



சமீபத்தில், திருப்பத்துார் மாவட்டம், ஜோலார்பேட்டையில் ஓடும் ரயிலில் நான்கு மாத கர்ப்பிணிக்கு பாலியல் தொல்லை தர முயற்சி செய்து, கீழே தள்ளிவிட்டது போல எனக்கும் நடந்திருக்கும். நல்ல வேளை தப்பித்தேன்.

இவ்வாறு அவர் கூறினார்.


ரேணுகாவிடம் நகை திருடிய போலீஸ்காரர் வசந்தகுமாரை, நேற்று சஸ்பெண்ட் செய்து, சென்னை போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவிட்டார்.

Advertisement