பொதுஇடம், நீர்நிலையில் குப்பை கொட்டினால் வழக்கு பாயும்! திடக்கழிவு மேலாண்மை சட்டத்தில் நடவடிக்கை

பொள்ளாச்சி; ''பொள்ளாச்சி நகரப்பகுதியில், பொது இடங்கள், வழிபாட்டு தலங்கள், பள்ளிகள், நீர்நிலைகளில் குப்பை கொட்டினால், அவர்கள் மீது திடக்கழிவு மேலாண்மை சட்ட விதிகளின் படி பொது சுகாதார வழக்கு பாயும்,'' என நகராட்சி கமிஷனர் எச்சரிக்கை விடுத்தார்.
பொள்ளாச்சி நகராட்சி, 1920ம் ஆண்டு முதல் சிறப்பு நிலை நகராட்சியாக செயல்படுகிறது. நகராட்சியின் மொத்த மக்கள் தொகை, 1,26,000 ஆகும்; 26,669 குடியிருப்புகள் உள்ளன.
நகர் பகுதியில், 31 டன் திடக்கழிவுகள் உற்பத்தியாகிறது; 116 துாய்மை பணியாளர்கள் வாயிலாக தினமும் வீடுகள் தோறும் சென்று, மக்கும் கழிவுகள், பிளாஸ்டிக் கழிவுகள், மறு சுழற்சி கழிவுகள், வீட்டு அபாயகரமான கழிவுகள், தரம் பிரித்து பெறப்படுகிறது.
தரம் பிரித்து சேகரித்ததுடன், அறிவியல் முறையில் மக்கும் கழிவுகள், நகராட்சியில் உள்ள நான்கு நுண் உரமாக்கும் மையங்கள் வாயிலாக, உரமாகவும், காய்கறி, பழக்கழிவுகளை கொண்டு, உயிரி எரிவாயு உற்பத்தி கூடம் வாயிலாக மின்சாரம் தயாரிக்கப்படுகிறது.
பிளாஸ்டிக் கழிவுகள், சிமென்ட் தொழிற்சாலைக்கு எரிபொருளுக்காகவும், வீட்டு அபாயகரமான கழிவுகள் எரியூட்டி வாயிலாக எரித்து அறிவியல் முறையில் கையாளப்பட்டு திடக்கழிவு மேலாண்மை செய்யப்பட்டு வருகிறது.
குப்பையை தரம் பிரித்து வழங்க நகராட்சி நிர்வாகம் வாயிலாக அறிவுறுத்தினாலும், ஒரு சிலர், குப்பையை தரம் பிரிக்காமல் ரோட்டோரம் வீசுகின்றனர்.வணிக, வர்த்தக நிறுவனங்கள் முன் குப்பை குவிந்து கிடக்கின்றன. மேலும், சாக்கடை கால்வாய், ஓடைகள் உள்ளிட்ட நீர்நிலைகள் அருகில், வாகனங்களில் கொண்டு வந்து குப்பை கொட்டப்படுகிறது.
கால்வாய்களில் தேங்குவதால், மழைக்காலங்களில் மழைநீர் செல்லாமல் தேங்கி ரோட்டில் கழிவுநீர், மழைநீரும் கலந்து செல்வதால் சுகாதாரம் பாதிக்கும் சூழல் உள்ளது.
இந்நிலையில், டி.கோட்டாம்பட்டி - பணிக்கம்பட்டி செல்லும் ரோட்டில் உள்ள குட்டையில் ஆட்டோவில் கொண்டு வந்த கழிவு மூட்டைகளை கொட்ட சிலர் முற்பட்டனர். இதை தடுத்து நிறுத்தி நகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள், வாகனத்தை, நகராட்சி அலுவலகத்துக்கு கொண்டு வந்தனர்.
அப்போது, 'இதுபோன்று நீர்நிலைகளில் குப்பை கொட்டினால், திடக்கழிவு மேலாண்மை சட்ட விதிகளின் படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்; முதல் முறை என்பதால் எச்சரிக்கப்படுகிறது. தொடர்ந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்,' என, நகராட்சி கமிஷனர் கணேசன் எச்சரித்து, குப்பை எடுத்து வந்த இடத்துக்கே கொண்டு சென்று தரம் பிரித்து நகராட்சி துாய்மை பணியாளர்களிடம் வழங்க அறிவுறுத்தினார்.
நகராட்சி கமிஷனர் கூறியதாவது:நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், நீர்நிலைகள், பொது இடங்கள், மழைநீர் வடிகால்கள், பள்ளிகள், வழிபாட்டு தலங்கள் அருகே குப்பை குவிக்க கூடாது என, ஏற்கனவே எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, கண்காணிப்பு மேற்கொள்ள அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.ஓடைகளில் மக்காத பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவுகளை வீசுவதால், கழிவுநீர் தேங்கி நின்று சுகாதாரம் பாதிக்கிறது. ஒரு சிலர் வீடுகளில் விழாக்கள் முடிந்த பின், குப்பைகளை ரோட்டோரம் கொட்டுகின்றனர்.தற்போது, நகரப்பகுதியில் பல இடங்களில் இருந்து, வாகனங்களில் கொண்டு வந்து கழிவு கொட்டுவது கண்டறியப்பட்டுள்ளது. அதில், நீர்நிலைகளில் கொட்டப்படும் கழிவுகள் இரு முறை தடுக்கப்பட்டுள்ளது.பொது இடங்கள், நீர்நிலைகளில் குப்பைகள்வீசுவது கண்டறியப்பட்டால் திடக்கழிவு மேலாண்மை சட்ட விதிகளின் படி, பொது சுகாதார வழக்குப்பதிவு செய்யப்படும். அபராதம் விதிப்பு, வாகனங்கள் பறிமுதல் உள்ளிட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.
மேலும்
-
எதிர்த்து எவர் வந்தாலும் எதிர்கொள்வோம்; லஞ்ச ஒழிப்பு சோதனைக்கு இ.பி.எஸ்., கண்டனம்
-
தங்கம் விலை இன்றும் உயர்வு; ஒரு சவரன் ரூ.65 ஆயிரத்தை நெருங்கியது!
-
குழந்தைக்கு பாலியல் துன்புறுத்தல்; 16 வயது சிறுவன் கைது
-
பஸ் வசதி இன்றி மாணவர்கள் அவதி
-
செயற்கை தடகள டிராக்கில் ரப்பர் துகள்கள் ஒட்டும் பணி
-
கிராமமா... நகரமா... வாழ்விடம் தெரியாமல் வசிக்கும் மக்கள்: அனுப்பானடி தாய்நகர் குடியிருப்போர் அவலம்