மேம்பாலத்தில் சென்டர் மீடியன் உடைப்பு வாகன ஓட்டிகள் திக்.. திக்...

புதுச்சேரி: நுாறடிச்சாலை மேம்பாலத்தில் சென்டர் மீடியன் கட்டையை உடைத்து குறுக்கில் புகுந்து செல்லும் வாகனங்களால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.

புதுச்சேரி சாலையில் ரூ. 35.72 கோடி மதிப்பில் கட்டப்பட்ட ரயில்வே மேம்பாலம் கடந்த 2018ம் ஆண்டு பயன்பாட்டிற்கு வந்தது.

இந்திரா சிக்னல் துவங்கி போக்குவரத்து துறை வரை மேம்பாலம் செல்கிறது. இதில், மரப்பாலத்தில் இருந்து இந்திரா சிக்னல் நோக்கி வரும் பாதையில், அரும்பார்த்தபுரம் பைபாசிற்குக்கு செல்ல தனி பாதை உள்ளது.

இந்திரா சிக்னலில் இருந்து அரும்பார்த்தபுரம் செல்ல வேண்டிய வாகனங்கள், மேம்பாலம் ஏறி போக்குவரத்து துறை வரை சென்று, 'யூ டர்ன்' எடுத்து சர்வீஸ் சாலை அல்லது மேம்பாலத்தில் ஏறி அரும்பார்த்தபுரம் சாலைக்கு செல்ல வேண்டும்.

சில வாகன ஓட்டிகள் மேம்பாலத்தில் இ.பி.எப்., கட்டடடத்தின் எதிரில், சென்டர் மீடியன் கட்டையை உடைத்து அபாயகரமான புதிய பாதையை உருவாக்கி உள்ளனர். இந்த பாதை வழியாக சாலையின் குறுக்கே புகுந்து அரும்பார்த்தபுரம் பைபாஸ் சாலைக்கு செல்கின்றனர்.

இதனால் மரப்பாலத்தில் இருந்து வேகமாக வரும் வாகனங்கள் குறுக்கே புகும் வாகனத்தின் மீது மோதி விபத்து நிகழும் அபாயம் உள்ளது. எனவே சென்டர் மீடியன் கட்டையை மேலும் 100 மீட்டர் துாரத்திற்கு உயரமாக நீட்டித்து அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement