இறங்கி வர மறுக்கும் பழனிசாமி; தொடருது செங்கோட்டையன் அதிருப்தி

2


சென்னை: வெளிப்படையாக தன் கருத்தைக் கூறிய பிறகும், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி கண்டு கொள்ளாமல் இருப்பதால், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனின் அதிருப்தி தொடர்வதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.


முதல்வராக இருந்த போது, அத்திக்கடவு -- அவினாசி திட்டத்தை செயல்படுத்தியதற்காக, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமிக்கு, கடந்த 9ம் தேதி கோவை அன்னுாரில் பாராட்டு விழா நடந்தது.


விழா மேடை மற்றும் விளம்பரங்களில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா படம் இல்லை எனக்கூறி, அ.தி.மு.க., மூத்த தலைவர் செங்கோட்டையன் இந்த விழாவை புறக்கணித்தார்; இதை வெளிப்படையாகவும் தெரிவித்தார்.

கொம்பு சீவினர்



பொதுவெளியில் உள்கட்சி விவகாரங்களை, வெளியில் பேசும் வழக்கம் இல்லாதவர் என்பதால், செங்கோட்டையனின் புறக்கணிப்பும், அவர் தெரிவித்த கருத்தும், அ.தி.மு.க.,வுக்குள் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.



அதைத் தொடர்ந்து, செங்கோட்டையனின் வீட்டுக்கு அவரது ஆதரவாளர்கள் சென்றனர். அவர்களை திருப்பி அனுப்பிய செங்கோட்டையன், 'என் மனதில் பட்ட கருத்தை தெரிவித்தேன். கட்சிக்கு எதிராக எதுவும் செய்ய மாட்டேன். அன்று பேசியது, அப்போதே முடிந்து விட்டது' என்றார்.



இதற்கிடையில், பழனிசாமிக்கு எதிராக செயல்பட்டதால், அ.தி.மு.க.,வில் இருந்து விலக்கி வைக்கப்பட்டோர்; ஒதுங்கி இருப்போரின் ஆதரவாளர்கள் சிலர் செங்கோட்டையனிடம் பேசி, பழனிசாமிக்கு எதிராக கொம்பு சீவி உள்ளனர்.



ஆனால், அவை எதற்கும் பிடிகொடுக்காத செங்கோட்டையன், 'கட்சியில் முக்கிய தலைவர்கள் புறக்கணிக்கப்படும் சூழல் காணப்பட்டது; முக்கிய தலைவர்களுக்கு எதிராக லோக்கலிலேயே எதிர்ப்பு அணியை உருவாக்க முயற்சிக்கின்றனர்.



அதுதான் எனக்கான முக்கிய பிரச்னை. அதை வெளிப்படையாக சொல்லி உள்ளேன்; கட்சித் தலைமை உணர்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மற்றபடி, எனக்கு வேறெந்த எண்ணமும் இல்லை' என தெளிவாக சொல்லி விட்டார். இதனால், செங்கோட்டையன் விவகாரத்தில் இருந்து அவர்கள் விலகி விட்டனர்.


அதன்பிறகு, ஈரோடு மாவட்டத்தில் நடந்த கட்சி கூட்டங்களில் செங்கோட்டையன் பங்கேற்று பேசினார். ஆனால், தன் மேடைப்பேச்சில் மறந்தும் கட்சியின் பொதுச்செயலர் பழனிசாமி பெயரை குறிப்பிடவில்லை; திட்டமிட்டே தவிர்த்து வருகிறார்.



செங்கோட்டையன் அமைதியான பின்பாவது, பழனிசாமி அவரிடம் தொலைபேசியில் பேசி சமாதானப்படுத்தி இருந்தால், இந்தப் பிரச்னை தொடராது. ஆனால், பழனிசாமி அதை செய்ய வில்லை; அதனால், செங்கோட்டையனின் வருத்தம் தொடர்வதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.

சீர்குலைந்து விடும்



இதுகுறித்து, அ.தி.மு.க., மூத்த நிர்வாகிகள் சிலர் கூறியதாவது:

கட்சியில் பழனிசாமியை விடவும் சீனியர் செங்கோட்டையன். எனினும், அவரது தலைமையை ஏற்று பயணித்து வருகிறார். மற்றவர்கள் போலவே தானும் நடத்தப்படுவது, அவருக்கு வருத்தத்தை தந்துள்ளது.

ஆனால், செங்கோட்டையனை சந்தித்தோ, தொலைபேசியில் தொடர்பு கொண்டோ பழனிசாமி சமாதானப்படுத்தினால், பலரும் இப்படி அதிருப்தியை வெளிப்படையாக தெரிவிக்கத் துவங்குவர்.


பின், சமாதானப்படுத்துவதே வேலையாகி, கட்சி கட்டுப்பாடு சீர்குலைந்து விடும். அதனால், செங்கோட்டையன் விஷயத்திலும் பழனிசாமி இறங்கி வர மறுக்கிறார். அதனால், பிப்., 9க்கு பின், பழனிசாமி பங்கேற்கும் கட்சி நிகழ்ச்சிகள் எதிலும் செங்கோட்டையன்
பங்கேற்கவில்லை.


நடப்பது கட்சிக்கு நல்லதல்ல என்பதே சீனியர்கள் பலரின் வருத்தம். இருந்தாலும், அதையும் கூட பழனிசாமியிடம் சொல்ல முடியாத நிலையில் உள்ளனர்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement