கார்வார் அருகே துறைமுகம் அமைக்க எதிர்ப்பு கடலுக்குள் 3 பெண்கள் தற்கொலை முயற்சி

கார்வார்: கார்வார் அருகே, துறைமுகம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, கிராம மக்கள் கடலில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். மூன்று பெண்கள் நடுக்கடலுக்குள் சென்று, தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
கர்நாடகாவின் கடலோர மாவட்டமான உத்தர கன்னடாவின், கார்வார் தாலுகா அங்கோலா அருகே உள்ளது கேனி கிராமம்.
இந்த கிராமத்தில் ஏராளமான மீனவர் குடும்பத்தினர் வசிக்கின்றனர். இந்நிலையில் கடற்கரையில் துறைமுகம் அமைக்க, கர்நாடக அரசின் துறைமுக துறை முடிவு செய்தது. இதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
ஆலோசனை கூட்டம்
ஆனாலும் துறைமுகம் அமைப்பது தொடர்பாக, உத்தர கன்னடா மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று ஆலோசனை கூட்டம் நடந்தது. இதுபற்றி அறிந்த கேனி கிராம மக்கள், கடலுக்குள் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் மூன்று பெண்கள், நடுக்கடலுக்கு சென்று, கடலில் மூழ்கி தற்கொலை செய்ய முயன்றனர்.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த கடலோர பாதுகாப்பு படையினர், மூன்று பெண்களையும் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு நடத்தினர்.
வாழ்வாதாரம்
அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் கூறுகையில், ''எங்கள் கஷ்டத்தை கேட்க, இங்கு யாரும் இல்லை. நாங்கள் தேர்ந்து எடுத்த காங்கிரஸ் எம்.எல்.ஏ., சதீஷ் செய்ல் எங்கு உள்ளார் என்று தெரியவில்லை. துறைமுகம் அமைக்க இங்கு நிலத்தை அளக்க கூடாது. துறைமுகம் அமைத்தால் எங்கள் வீடும், வாழ்வாதாரமும் பறிபோகும். வேறு இடத்தில் எங்களுக்கு வீடு கிடைத்தாலும், இங்கு வந்து மீன்பிடித்து செல்வது கடினம். இந்த பகுதியில் கடலில் ஆழம் குறைவு. மீனவர்களும் கரை வர எளிதாக இருக்கும்.
துறைமுகம் அமைத்தால் ஆழம் அதிகரிக்கும்; பாதுகாப்பு அதிகரிக்கப்படும்; பாதுகாப்பு என்ற பெயரில் மீன்பிடிக்க விட மாட்டார்கள். எங்கள் இடத்தை யாருக்காகவும் விட்டு தர மாட்டோம். உயிரை வேண்டும் என்றாலும் கொடுப்போம்; துறைமுகம் வர விட மாட்டோம்,'' என்றனர்.
நிலைமை கை மீறி செல்வதை தடுக்க, நேற்றும், இன்றும் கேனி கிராமத்தில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டது. உயிர் காக்கும் உடைகளை அணிந்து கொண்டு போலீசாரும், கடலோர பாதுகாப்பு படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும்
-
குழந்தைக்கு பாலியல் துன்புறுத்தல்; 16 வயது சிறுவன் கைது
-
பஸ் வசதி இன்றி மாணவர்கள் அவதி
-
செயற்கை தடகள டிராக்கில் ரப்பர் துகள்கள் ஒட்டும் பணி
-
கிராமமா... நகரமா... வாழ்விடம் தெரியாமல் வசிக்கும் மக்கள்: அனுப்பானடி தாய்நகர் குடியிருப்போர் அவலம்
-
சமயநல்லுாரில் ரயில்வே கேட் அவதி
-
வங்கக்கடலில் நிலநடுக்கம்! கோல்கட்டாவில் உணரப்பட்ட அதிர்வுகள்