குழந்தைக்கு பாலியல் துன்புறுத்தல்; 16 வயது சிறுவன் கைது

13


மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில் மூன்றரை வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்த 16 வயது சிறுவன் கைது செய்யப்பட்டான்.


மயிலாடுதுறை மாவட்டத்தில் கிராமப் பகுதியைச் சேர்ந்த மிகவும் ஏழ்மை நிலையில் உள்ள கூலி தொழிலாளியின் மகளான மூன்றரை வயது சிறுமி நேற்று அருகில் உள்ள அங்கன் வாடிக்கு சென்றுள்ளார். பின்னர் மதிய உணவு இடைவேளையில் கை கழுவ சென்ற சிறுமியை காணவில்லை.


ஆசிரியை மற்றும் உதவியாளர் தேடிய நிலையில் அங்கன்வாடிக்கு அருகே ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் குழந்தையின் சத்தம் கேட்டுள்ளது. அவர்கள், அங்கு சென்று பார்த்த போது சிறுமி தலை மற்றும் முகத்தில் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிய நிலையில் இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். தகவல் அறிந்த கொள்ளிடம் இன்ஸ்பெக்டர் ராஜா மற்றும் போலீசார் விரைந்து வந்து சிறுமியை மீட்டு தங்களது சொந்த செலவில் தனியார் ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்து சிகிச்சைக்காக சீர்காழி அரசு மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர்.



பின்னர் அந்த சிறுமி மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சந்தேகத்தின் பேரில் போலீசார் சிறுமி வசிக்கும் பகுதியைச் சேர்ந்த பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யும் 16 வயது சிறுவனை பிடித்து விசாரணை நடத்தினர்.


அதில் அந்த சிறுவன் கை கழுவ வந்த சிறுமியை யாரும் இல்லாத இடத்திற்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற போது சத்தம் போட்டதால் ஆத்திரத்தில் கல்லால் தலை மற்றும் முகத்தில் அடித்து காயப்படுத்தியது தெரியவந்தது.


அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ், வழக்குப்பதிவு செய்து சிறுவனை கைது செய்து இன்று காலை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

Advertisement