மங்களூரு சிறைக்குள் கஞ்சாவை வீசிய இருவருக்கு வலை வீச்சு

மங்களூரு: மங்களூரு மத்திய சிறைக்குள், பைக்கில் வந்த நபர்கள் பட்டப்பகலில் போதைப்பொருள் வீசியது, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

பெங்களூரின் பரப்பன அக்ரஹாரா மத்திய சிறை உட்பட பல்வேறு சிறைகளில் போதைப்பொருள், மொபைல் போன் பயன்படுத்துவது போன்ற விதிமீறல்கள் நடக்கின்றன.

பணம் கொடுத்தால் சிறையில் ராஜ உபச்சாரம் செய்வதாக, பல ஆண்டுகளாகவே குற்றச்சாட்டு இருந்து வருகிறது.

சில மாதங்களுக்கு முன், ரேணுகாசாமி கொலை வழக்கில், பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்த நடிகர் தர்ஷன், சிகரெட் பிடித்தபடி, ரவுடிகளுடன் பேசிய வீடியோ வெளியாகி, பரபரப்பை ஏற்படுத்தியது. பல்லாரி சிறையில் சீட்டாடும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது.

போலீஸ் அதிகாரிகள், அவ்வப்போது சிறைகளில் திடீர் சோதனை நடத்தி கஞ்சா, மொபைல் போன், கத்தி, சிம் கார்டுகள்,சிகரெட்கள் என, தடை செய்யப்பட்ட பொருட்களை பறிமுதல் செய்கின்றனர். ஆனால் அவற்றை கட்டுப்படுத்த முடியவில்லை.

இதற்கிடையே மங்களூரு மத்திய சிறையில், பட்டப்பகலில் போதைப்பொருள் வீசிய சம்பவம் நடந்துள்ளது. மங்களூரு நகரின், பிரதான சாலையில் மத்திய சிறை உள்ளது. நேற்று மதியம் சிறைக்குள் காம்பவுண்ட் சுவர் அருகில், பொட்டலம் ஒன்று காணப்பட்டது. பாதுகாப்பு போலீசார், பொட்டலத்தை பிரித்து பார்த்த போது கஞ்சா இருப்பது தெரிந்தது.

சிறையில் உள்ள கைதிகளுக்காக, கஞ்சாவை வீசியதாக கூறப்படுகிறது. கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்த போது, நம்பர் பிளேட் இல்லாத ஸ்கூட்டியில் வந்த இருவர், சிறை காம்பவுண்ட் சுவருக்கு வெளியே இருந்து, ஒரு பொட்டலத்தை சிறைக்குள் வீசிவிட்டு வேகமாக சென்றது பதிவாகியிருந்தது.

கஞ்சா வீசிய நபர்களை கண்டுபிடிக்க போலீசார் முயற்சிக்கின்றனர்.

Advertisement