சிறுமிக்கு கத்திக்குத்து பள்ளி மாணவன் கைது

குளித்தலை : கரூர் மாவட்டம், குளித்தலை அடுத்த, கடவூர் யூனியன் செம்பியாநத்தம் பஞ்., அண்ணாவி பூசாரிப்பட்டியைச் சேர்ந்த விவசாய கூலித் தொழிலாளியின் 15 வயது மகள், தரகம்பட்டி மாதிரி பள்ளியில், பத்தாம் வகுப்பு படிக்கிறார். நேற்று முன்தினம் இரவு வீட்டில் இருந்து வெளியே சென்றார். வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை. பெற்றோர் தேடிச் சென்றபோது, சிறுமி கழுத்தில் ரத்தக் காயங்களுடன் நடந்து வந்தார். உடனே, அவரை மீட்டு, குஜிலியம்பாறை தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.


பெற்றோர் புகாரில், பாலவிடுதி போலீசார் வழக்கு பதிவு செய்து, சந்தேகத்தில் அரசு பள்ளியில், பிளஸ் 2 படிக்கும் மாணவர் ஒருவரை கைது செய்து விசாரிக்கின்றனர். இதற்கிடையே, மாணவி மூன்று பேரால் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டதாக தகவல் பரவியது. இதை மாவட்ட காவல்துறை மறுத்துள்ளது.

கரூர் எஸ்.பி., அலுவலகம் அளித்துள்ள விளக்கம்:



கரூர் மாவட்டம், கடவூர் அருகே, 15 வயது மாணவியை, அதே ஊரைச் சேர்ந்த உறவினரான, 17 வயது மாணவன், இன்ஸ்டாகிராமில் தொடர்பு கொண்டு, வீட்டுக்கு வெளியே வரவழைத்து, கத்தியால் கழுத்துப் பகுதியில் குத்திவிட்டு, மாணவியின் ஒரு சவரன் செயினை பறித்துச் சென்றுள்ளார்.


விசாரித்த போது, மாணவி, அந்த மாணவனை இழிவாகப் பேசியதால், கோபத்தில் இச்செயலை மாணவன் செய்துள்ளதாக தெரிகிறது. மாணவி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து கத்தியால் குத்தப்பட்டதாக உண்மைக்கு புறம்பான தகவல்களை வெளியிட வேண்டாம்.

இவ்வாறு, கூறப்பட்டுள்ளது.

Advertisement