'பெண்களுக்கு பாதுகாப்பான ஆட்சி வழங்கியவர் ஜெயலலிதா'; பிறந்த நாள் விழாவில் பழனிசாமி பேச்சு

சென்னை : “பெண்களுக்கு பாதுகாப்பான ஆட்சியை வழங்கியவர் ஜெயலலிதா,” என அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி பேசினார்.



மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 77வது பிறந்த நாள், அ.தி.மு.க.,வினரால் தமிழகம் முழுதும் நேற்று கொண்டாடப்பட்டது.



சென்னை ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சி அலுவலகத்தில் ஜெயலலிதா சிலைக்கு,
பொதுச்செயலர் பழனிசாமி நேற்று மாலை அணிவித்து, மலர் துாவி மரியாதை செலுத்தினார்.



பின், கட்சி கொடியேற்றி, இனிப்புகள் வழங்கினார். அங்கு வைக்கப்பட்டிருந்த, 77 கிலோ 'கேக்' வெட்டி, நிர்வாகிகள், தொண்டர்களுக்கு வழங்கினார். ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மருத்துவ முகாம், கண் பரிசோதனை முகாமை பழனிசாமி துவக்கி வைத்தார்.



பின், பழனிசாமி பேசியதாவது:

பள்ளி ஆசிரியர்களுக்கு நல்ல ஆலோசனைகள் வழங்கி, எவ்வித பாலியல் வன்கொடுமைக்கும் ஆளாகாமல், பெண் குழந்தைகளை பாதுகாக்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.



பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும்.



அ.தி.மு.க., ஆட்சியில் இருந்தபோது, பெண்கள் பாதுகாப்பாக இருந்தனர்.

இதற்கு தமிழக அரசு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். சிறுமியருக்கும், பெண்களுக்கும் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். பெண்கள் வளர்ச்சிக்காவும் பாதுகாப்புக்காகவும் பல்வேறு திட்டங்களை, அ.தி.மு.க., அரசு செயல்படுத்தியது.


பெண்களின் உரிமையை பாதுகாத்தவர் ஜெயலலிதா. பெண் கல்வி, சமூக, பொருளாதார மேம்பாட்டுக்காக மகப்பேறு நிதியுதவி, தாலிக்கு தங்கம், பள்ளிகளில் 'சானிட்டரி நாப்கின்' வழங்கல், தொட்டில் குழந்தைகள் திட்டம், அம்மா இருசக்கர வாகனம் என பல்வேறு திட்டங்களை, அ.தி.மு.க., அரசு செயல்படுத்தியது.

இவ்வாறு அவர் பேசினார்.


அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்களான செங்கோட்டையனும் தங்கமணி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் சிலர், தங்களுடைய மாவட்டங்களில் நடந்த ஜெயலலிதா பிறந்த நாள் கொண்டாட்டங்களில் கலந்து கொண்டாலும், சென்னை, கட்சி தலைமை அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாதது அக்கட்சியினரை வருத்தத்துடன் பேச வைத்திருக்கிறது.

Advertisement