மூன்று மாதமாக சம்பளம் கிடைக்காமல் அவதி.. திண்டாடும் பணியாளர்கள்! 100 நாள் வேலை திட்ட பிரச்னை தீர்க்கப்படுமா?

பந்தலுார்; நீலகிரி மாவட்டத்தில், 100 நாள் வேலை திட்டத்தில் வேலை செய்யும், பணியாளர்களுக்கு கடந்த, 3- மாதமாக சம்பளம் வழங்காத நிலையில், தினசரி செலவுகளுக்கு கூட பணம் இல்லாமல் திண்டாடும் நிலை ஏற்பட்டுள்ளது.
மாநிலம் முழுவதும் கிராம ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், மத்திய அரசு திட்டமான மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ், பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதில், கிராமப்புற ஆண்கள் மற்றும் பெண்கள் பணிக்கு செல்வதால், வேலைவாய்ப்பு அதிகரித்து அவர்களுக்கு வருவாய் கிடைத்து வருகிறது.
அதில், நீலகிரி மாவட்டத்தில், 'ஊட்டி 'பிளாக்கில்' 13 ஊராட்சிகளில், 1,625 பேர்; கூடலுாரில், 5 ஊராட்சிகளில் 1,429 பேர்; குன்னுாரில்,6 ஊராட்சிகளில், 735 பேர்; கோத்தகிரியில், 12 ஊராட்சிகளில், 1,240,' என, 5,029 பேர் பணியாற்றி வருகின்றனர்.
இவர்களுக்கு, கடந்த ஆண்டு, நவ., மாதம், 27ம் தேதியில் இருந்து, சம்பளம் வழங்காமல் உள்ளதால், தினசரி செலவுகளுக்கு பணம் இல்லாமல் மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.
கடன் வாங்க வேண்டிய நிலை
மேலும், இந்த திட்டத்தின் பணித்தள மேற்பார்வையாளர்கள், 100 நாள் வேலை திட்டத்தில் வேலைகளை மேற்பார்வை செய்வதுடன், ஜல் ஜீவன் திட்டத்தில் குடிநீர் குழாய் பொருத்தப்பட்டு பயன்பெறும் பயனாளிகள் விவரங்கள், அரசு தொகுப்பு வீடு கட்டும் பணிகளின் விவரங்கள் குறித்தும், தினசரி ஆய்வு செய்ய வேண்டிய நிலையில், வாகனங்களுக்கு கூட பணம் இல்லாமல் சிரமப்பட்டு வருகின்றனர்.
இதற்காக, பல்வேறு ஆவணங்களை ஜெராக்ஸ் எடுக்க வேண்டிய நிலையில், அதற்கும் பணம் கொடுக்காததால், கடன் வாங்கி பணி மேற்கொள்ள வேண்டிய சூழலில் சிரமப்பட்டு வருவதாக புலம்புகின்றனர். தினசரி வேலை செய்து, தங்கள் செலவுகளுக்கு வட்டிக்காரர்களிடம் கையேந்த வேண்டிய நிலையில், கடனாளிகளாக மாறி வருவதாக பலரும் வருத்தம் தெரிவிக்கின்றனர். மாதந்தோறும் தங்களுக்கான ஊதியத்தை வழங்கினால், பயனாக இருக்கும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.
வேலை வாய்ப்பு இல்லை
சமூக ஆர்வலர் சுப்ரமணியம் கூறுகையில்,'' நீலகிரி மாவட்டத்தில் விவசாயம்; சுற்றுலா ஆகியவை மட்டும் பொருளாதாரத்தில் முக்கிய பங்காற்றி வருகின்றன. தற்போது, இரண்டு தொழில்களில் நஷ்டம் ஏற்பட்டு வருவதால், இங்குள்ள கிராம மக்களுக்கு பணி கிடைப்பதில்லை. பல இடங்களில் வடமாநில தொழிலாளர்கள் தங்க பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில், 100 நாள் வேலை திட்டம் மட்டுமே கிராம மக்களின் வாழ்வுக்கு மிகவும் உதவிகரமாக உள்ளது. அதிலும், மூன்று மாதமாக சம்பளம் வரவில்லை. இதனால் பணியாளர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். மாவட்ட நிர்வாகம் இதற்கான ஆய்வு நடத்தி அவர்களுக்கு சம்பளம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.
கூடலுார் வட்டார வளர்ச்சி அலுவலர் ஸ்ரீதரன் கூறுகையில், ''100 நாள் திட்டத்தில் சம்பளம் வழங்குவதற்கு இதுவரை அரசு நிதி ஒதுக்கீடு செய்யவில்லை. அதனால் தான் தாமதம் ஏற்பட்டுள்ளது. நிதி ஒதுக்கியவுடன் சம்பளம் அவர்கள் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும்,'' என்றார்.
மேலும்
-
குழந்தைக்கு பாலியல் துன்புறுத்தல்; 16 வயது சிறுவன் கைது
-
பஸ் வசதி இன்றி மாணவர்கள் அவதி
-
செயற்கை தடகள டிராக்கில் ரப்பர் துகள்கள் ஒட்டும் பணி
-
கிராமமா... நகரமா... வாழ்விடம் தெரியாமல் வசிக்கும் மக்கள்: அனுப்பானடி தாய்நகர் குடியிருப்போர் அவலம்
-
சமயநல்லுாரில் ரயில்வே கேட் அவதி
-
வங்கக்கடலில் நிலநடுக்கம்! கோல்கட்டாவில் உணரப்பட்ட அதிர்வுகள்