கண்மாயை அழித்த கனிமவள கொள்ளையர்கள் மண், சுற்றுச்சூழல் பாதிக்கும் என இயற்கை ஆர்வலர்கள் கணிப்பு

விருதுநகர்: விருதுநகர் அருகே இ.குமாரலிங்கபுரம் கண்மாயில் 500 கியூபிக் மீட்டருக்கு 5 ஆயிரம் கியூபிக் மீட்டர் வரை கனிமவள கொள்ளையர்கள் செய்த சுரண்டலால் எதிர்காலத்தில் இப்பகுதியில் மண், சுற்றுச்சூழல் பாதிக்கும் என இயற்கை ஆர்வலர்கள் கணிக்கின்றனர்.
இ.குமாரலிங்கபுரத்தில் ஜன. 28ல் ஜவுளி பூங்கா அமையவுள்ள இடத்திற்கு அருகே உள்ள பெரியகுளம் கண்மாயில் சட்டவிரோதமாக கிராவல் மணல் திருட்டில் ஈடுபட்ட 12 லாரிகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இதில் கனிமவளக் கொள்ளை தடுக்க தவறியதாக சாத்துார் தாசில்தார் ராமநாதன் உட்பட 7 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுஅதில் ஒருவர் விடுவிக்கப்பட்டார்.
இந்நிலையில் 500 கியூபிக் மீட்டர் மட்டுமே அள்ள அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் 5 ஆயிரம் கியூபிக் மீட்டர் வரை திருடி உள்ளனர். மாவட்ட நிர்வாகத்தின் சிறப்பு டி.ஆர்.ஓ., ஆனந்தி தலைமையிலான முதற்கட்ட விசாரணையில் குற்றம் நடந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
பறிமுதல் செய்த 12 லாரிகளில் 8 லாரிகள் மாயமான நிலையில் தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியாக வந்து விட்டன. இந்நிலையில் பிப். 20ல் யார் யாருக்கு எவ்வளவு கமிஷன் வழங்கியது என்ற விவரம் அடங்கிய டைரியின் பக்கங்கள் வாட்ஸ் ஆப்பில் வலம் வந்தன. பிப். 22ல் முதல் சிறப்பு டி.ஆர்.ஓ., ஆனந்தி கனிமவள கொள்ளை நடந்த கண்மாயை பார்வையிட்டார்.
இதில் கண்மாய் ஒரு பக்கம் அதீத ஆழமாகவும், இன்னொரு பக்கம் மேடாகவும் மாறி நீர் தேக்க வழியில்லாதது போன்று மாறியிருந்தது தெரிந்தது. பொதுவாக மேலே உள்ள வண்டல் மண்ணை அள்ள தான் ஆண்டு தோறும் மாவட்ட நிர்வாகம் சார்பில் அனுமதிக்கப்படுகிறது. இவர்கள் வண்டல் மண்ணை தாண்டி 20 அடி ஆழத்திற்கு கிராவல் மண்ணையும் சேர்த்து அள்ளியுள்ளனர். கலெக்டர், ஜவுளி பூங்கா அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காவிடில்இந்த குற்ற சம்பவம் வெளியே வந்திருக்காது.
புவியியல் இயற்கை ஆர்வலர் ஒருவர் கூறுகையில், ஆற்றில் மண்ணை ஆழமாக அள்ளும் போது அதன் போக்கு மாறி, தேங்கி நிற்கும் திறன் குறைவது போல், கண்மாய்களில் அதீத ஆழம் ஏற்படுத்தும் போது மண்ணின் தன்மைக்கு ஏற்ப அதன் தேக்கும் திறன் போய்விடுகிறது. இதனால் பெய்யும் மழைநீர் பூமிக்கு அடியில் செல்கிறது. தேக்குவதற்கோ, பயன்படுத்துவதற்கோ முடியாத நிலைதான் ஏற்படும். இது சுற்றுப்புறத்தில் உள்ள மண்ணின் களர் தன்மையை இன்னும் அதிகரிக்கும். இதனால் பயிரிடுவதும் பாதிக்கப்படும். தற்போது இந்த நிலை தான் இ.குமாரலிங்கபுரம் கண்மாய்க்கு ஏற்பட்டுள்ளது, என்றார்.
எனவே மாவட்ட நிர்வாகம் அறிவியல் பூர்வமாக புவியியல் ரீதியான ஆய்வுகளை செய்து கனிம வள கொள்ளையில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாவட்டத்தில் இதே கும்பல் பல்வேறு கண்மாய்களில் சுரண்டி வருவதாக ஒரு குற்றச்சாட்டும் உள்ளது. முழுவீச்சில் விசாரணை நடத்தி தீர்வு காண வேண்டும்.
மேலும்
-
கான்ஸ்டபிள் சம்பளம் உயர்வு; குறைந்தபட்ச கல்வித் தகுதி பிளஸ் 2: போலீஸ் கமிஷன் பரிந்துரை
-
எதிர்த்து எவர் வந்தாலும் எதிர்கொள்வோம்; லஞ்ச ஒழிப்பு சோதனைக்கு இ.பி.எஸ்., கண்டனம்
-
தங்கம் விலை இன்றும் உயர்வு; ஒரு சவரன் ரூ.65 ஆயிரத்தை நெருங்கியது!
-
குழந்தைக்கு பாலியல் துன்புறுத்தல்; 16 வயது சிறுவன் கைது
-
பஸ் வசதி இன்றி மாணவர்கள் அவதி
-
செயற்கை தடகள டிராக்கில் ரப்பர் துகள்கள் ஒட்டும் பணி