கான்ஸ்டபிள் சம்பளம் உயர்வு; குறைந்தபட்ச கல்வித் தகுதி பிளஸ் 2: போலீஸ் கமிஷன் பரிந்துரை

சென்னை: தமிழகத்தில் உள்ள போலீஸ் கான்ஸ்டபிள்களுக்கு சம்பளத்தை உயர்த்தவும், குறைந்தபட்ச கல்வித் தகுதி பிளஸ் 2 ஆக உயர்த்தவும், அரசுக்கு போலீஸ் கமிஷன் பரிந்துரைத்துள்ளது.
கடந்த 2022ம் ஆண்டு ஜனவரியில், 5வது போலீஸ் கமிஷனை முதல்வர் ஸ்டாலின் அமைத்தார். இந்த கமிஷனில் சென்னை ஐகோர்ட் மாஜி நீதிபதி சி.டி.செல்வம், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி அலாவுதீன், ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ்., அதிகாரி கே. ராதாகிருஷ்ணன் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.
இவர்கள் தவிர, பிரபல மனநல நிபுணர் ராமசுப்ரமணியம், ஓய்வு பெற்ற பேராசிரியர் நளினி ராவ் ஆகியோர் இந்த குழுவில் உறுப்பினர்களாக இடம்பெற்றனர். மூத்த ஐ.பி.எஸ்., அதிகாரி மகேஷ்குமார் அகர்வால், குழுவின் உறுப்பினர் செயலாளராகவும் இருந்தார்.
இந்த குழுவினர் பல்வேறு கட்ட கருத்துகள், ஆலோசனைகள் ஆகியவற்றுக்கு பின்னர், தங்களது அறிக்கையை முதல்வர் ஸ்டாலினிடம் அண்மையில் அளித்துள்ளனர். அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருக்கும் பரிந்துரைகள் என்ன என்பது பற்றிய விவரங்கள் வெளியாகி உள்ளன.
அதன்படி, போலீஸ் கான்ஸ்டபிள் ரூ.21,700 - ரூ.69.100 ஆக நிர்ணயம் செய்யலாம் என்ற முக்கியமான பரிந்துரை இடம்பெற்றுள்ளது. இது தவிர, பல்வேறு சலுகைகளும் தரலாம் என்றும் அதில் பரிந்துரைக்கப்பட்டு உள்ளது.
ஊதியத்தைத் தொடர்ந்து கல்வித்தகுதியிலும் மாற்றங்களை குழு பரிந்துரைத்துள்ளது. இதுவரை கான்ஸ்டபிள் பணிக்கு கல்வித்தகுதி 10ம் வகுப்பு என்பதை மாற்றி, 12ம் வகுப்பு அல்லது அதற்கு இணையானதை இனி கல்வித் தகுதியாக நிர்ணயிக்கலாம் என்று கூறி உள்ளது.
தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அளிக்கப்படும் 20 சதவீதம் என்பதை 1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை தமிழ் வழியில் பாடம் பயின்றவர்களுக்கு அளிக்கலாம் என்றும் பரிந்துரைத்துள்ளது.
பணியின் போது காவலர்களின் மனோநிலை பற்றிய சில முக்கிய விஷயங்களையும் அடிக்கோடிட்டு, பரிந்துரைகளும் குறிப்பிடப்பட்டு உள்ளன. பணி அழுத்தம், அதன் காரணமாக நிகழும் காவலர்கள் தற்கொலை சம்பவங்களை சுட்டிக்காட்டி, குறிப்பிட்ட கால இடைவெளியில் அவர்களின் மனநிலையை மதிப்பீடு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு இருக்கிறது.
அது தொடர்பான குறிப்புகளை தொகுத்து, மாவட்ட எஸ்.பி.,க்களுக்கு குறிப்பேடாக அளிக்கலாம். அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் தேவைப்படும் பட்சத்தில், உயரதிகாரிகளுக்கும் தனித்தனியாக பகிரலாம் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.
காவலர்களின் மனஅழுத்தம் போக்க குறிப்பிட்ட கால இடைவெளிகளில் மருத்துவ ஆலோசனைகள், முகாம்கள் நடத்தலாம். புகைப்பிடிப்போர், மதுபழக்கம் உள்ளவர்கள் யார் என்பதை கண்டறிந்து, அவர்களுக்கு மருத்துவ நிபுணர்கள் மூலமாக கவுன்சிலிங் அளிக்கலாம் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது.



மேலும்
-
எம்.பி., தொகுதிகள் குறையும்; மார்ச் 5ல் அனைத்து கட்சி கூட்டத்துக்கு முதல்வர் அழைப்பு
-
கேரள காங்கிரஸ் சேட்டை பதிவு; பாலிவுட் நடிகை கொந்தளிப்பு
-
ஜாக்டோ ஜியோ போராட்டம்: சிங்கம்புணரி ஒன்றியத்தில் 95 சதவீத பள்ளிகள் அடைப்பு
-
ஆசியாவிலேயே பெரிய தகவல் தரவு மையம்; திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்!
-
சட்டசபையில் கூச்சல், குழப்பம்; ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.,க்கள் 12 பேர் சஸ்பெண்ட்
-
ஆந்திராவில் யானைகள் தாக்கி 5 பக்தர்கள் பரிதாப பலி