திட்டிய வழக்கில் எம்.எல்.ஏ.,க்களுக்கு குற்றப்பத்திரிகை நகல் வழங்கல்

நாகர்கோவில் : அ.தி.மு.க., ஆட்சி காலத்தில் கூட்டுறவுத்துறை அதிகாரியை ஒருமையில் திட்டியதாக தொடரப்பட்ட வழக்கில் தி.மு.க., காங்., எம்.எல்.ஏ.,க்களுக்கு நேற்று நாகர்கோவில் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டது.

2018-ல் கன்னியாகுமரி மாவட்ட கூட்டுறவு இணைப்பதிவாளராக இருந்தவர் நடுக்காட்டுராஜா. அப்போது நடந்த உள்ளாட்சித் தேர்தலில் இவர் அ.தி.மு.க.,வுக்கு சாதகமாக செயல்பட்டதாக கூறியும், கண்டனம் தெரிவித்தும் இணை பதிவாளர் அலுவலகத்தில் அப்போது எம்.எல்.ஏ.,க்களாக இருந்த முன்னாள் அமைச்சர்கள் சுரேஷ்ராஜன், மனோ தங்கராஜ், ராஜேஷ் குமார், பிரின்ஸ் மற்றும் தி.மு.க., காங்., நிர்வாகிகள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இணைப்பதிவாளருக்கும் இவர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. தன்னை ஒருமையில் திட்டியதாக கூறி நடுக்காட்டுராஜா நேசமணிநகர் போலீசில் புகார் செய்தார். இது தொடர்பாக 13 பேர் மீது நேசமணி நகர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

இவ்வழக்கு விசாரணை நாகர்கோவில் குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்தது. நேற்று தி.மு.க., எம்.எல்.ஏ., மனோதங்கராஜ், காங்., எம்.எல்.ஏ.,க்கள் ராஜேஷ்குமார், பிரின்ஸ் உள்ளிட்டோர் ஆஜராயினர். அவர்களுக்கு குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டது. பின் மார்ச் 5-க்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.

Advertisement