விவசாயிகள் கவலை

ராஜபாளையம்: ராஜபாளையத்தில் அதிகரித்துள்ள வெயிலால் மாமரங்களில் பூச்சிகளின் தாக்கம் அதிகரித்துள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

மேற்கு தொடர்ச்சி மலை அடிவர பகுதிகளான ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்துார், வத்திராயிருப்பு பகுதிகளில் 2 ஆயிரம் ஹெக்டேரில் மா விவசாயம் நடந்து வருகிறது. இங்கு விளையும் சப்பட்டை, பஞ்சவர்ணம், கிளிமூக்கு உள்ளிட்ட வகைகளுக்கு வெளி மாநிலம் வரை வியாபாரிகளிடம் நல்ல வரவேற்பு உண்டு. இது தவிர அல்போன்சா, இமாம் பசந்த், செந்துாரம் உள்ளிட்ட பல்வேறு வகைகள் உள்ளன. தொடர் வெயிலின் தாக்கத்தால் வெள்ளை ஈக்கள் இலைகளில் படர்ந்து பச்சையத்தை உறிஞ்சுவதுடன் தேன் பூச்சிகளின் பாதிப்பால் சாகுபடியின் போது பழங்கள் அழுகி வீணாகும் நிலை ஏற்படுகிறது. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

விவசாயி கணேசன்: வெயிலின் தாக்கம் அதிகரிப்பு மழை இல்லாததால் மாவு பூச்சி தேன் பூச்சிகளின் தாக்குதல் அதிகரித்துள்ளன. முன்பு மூன்று முறை மட்டும் பூச்சிகளை கட்டுப்படுத்த மருந்து உபயோகித்த நிலை மாறி வாரம் ஒரு முறை உபயோகப்படுத்த வேண்டி உள்ளது. மருந்துகளை தவிர்க்க விரும்புவோர் சாகுபடியின் போது பழங்கள் பெருமளவு வீணாகும் நிலை ஏற்படுகிறது. வேளாண் அதிகாரிகள் கண்காணித்து உரிய தீர்வு வழங்க எதிர்பார்த்துள்ளனர்.

Advertisement