பா.ஜ,வில் இருந்து ரஞ்சனா நாச்சியார் விலகல்

7

சென்னை: பா.ஜ., கட்சியிலிருந்து விலகிக் கொள்வதாக, நடிகை ரஞ்சனா நாச்சியார் அறிவித்துள்ளார்.


சினிமா நடிகையும், பா.ஜ., பிரமுகருமான ரஞ்சனா நாச்சியார், அரசு பஸ் படியில் தொங்கியபடி பயணித்த மாணவர்களை அடித்து கீழே இறக்கி விட்ட சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த வழக்கில் அவரை போலீசார் கைது செய்தனர். அவர் செய்தது சரி என்றும், தவறு என்றும் இரு வேறு கருத்துக்கள் எழுந்தன.


தொடர்ந்து பா.ஜ., சார்பில் சமூக வலைதளத்தில் செயல்பட்டு வந்த அவர், கட்சியில் இருந்து விலகிக்கொள்வதாக இன்று அறிவித்துள்ளார். அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது: கடந்த எட்டு ஆண்டுகளுக்கு மேலாக பா.ஜ.,வில் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றிய நான் பா.ஜ.,வில் இருந்து விடைபெறுகிறேன்.தேசப்பற்று மிகுந்த கட்சி, தேசியத்தை காக்கின்ற கட்சி, தெய்வ பக்தி கொண்ட கட்சி என்றெல்லாம் எண்ணித்தான் தேசியத்தையும் தெய்வீகத்தையும் கட்சிப் பணியாக செய்து கடமையாற்றி விடலாம் என கருதித்தான் இந்த கட்சியில் இணைந்தேன், இயங்கினேன்.



பெண்கள் அரசியல் ஆளுமைகளாக மாறுவது அரிதான காரியம், அரிதிலும் அரிதாக ஓரிருவர் முன்னேறினாலும் அந்த முன்னேற்றத்தை தடுத்து முட்டுக்கட்டை போடுவது என்பது பெண்களின் அரசியல் இருப்பை கேள்விக்குறியாக்குகிறது. இனி மக்கள் சேவையில் என் புதிய பாதையில் புரட்சிப் பயணம், அது எழுச்சிப் பயணம், வரும் காலங்களில் இனி அதுவே வெற்றிப் பயணம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement