தற்காலிக ஊழியர்கள் பணி நீக்கம்: சென்னை ஐகோர்ட் உத்தரவு

சென்னை: கடந்த 2020ம் ஆண்டு நவ., மாதத்திற்கு பிறகு, தமிழக அரசு துறைகளில் நியமிக்கப்பட்ட தற்காலிக ஊழியர்களை நீக்க தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டு உள்ளது.
அரியலூரில் ஊரக வளர்ச்சித் துறையில் 1997 ல் கணிப்பொறி உதவியாளராக தினக்கூலி சம்பளத்தில் நியமிக்கப்பட்ட சத்யா என்பவர், தனது பணியை வரன்முறை செய்யக்கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரித்த ஐகோர்ட், மனுதாரரின் மனுவை பரிசீலனை செய்து 12 வாரங்களில் முடிவெடுக்க ஏற்கனவே உத்தரவிட்டு இருந்தது.
இதனை எதிர்த்து ஊரக வளர்ச்சித்துறை சார்பில் சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை நீதிபதிகள் ஆர். சுப்ரமணி மற்றும் ஜி. அருள்முருகன் ஆகியோர் கொண்ட அமர்வு விசாரணை நடத்தியது. அப்போது, தற்காலிக அடிப்படையில் பணி நியமனம் செய்யப்படாது என தலைமைச் செயலர் மனு தாக்கல் செய்வாரா எனக் கேள்வி எழுப்பி இருந்தனர்.
இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் கூடுதல் தலைமைச்செயலர் தாக்கல் செய்த மனுவில், தற்காலிக பணி நியமனங்களை கைவிடுவது என 2020 நவ.,28 ம் தேதி அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது.
இதனை பதிவு செய்த நீதிபதிகள், 2020ம் ஆண்டு நவ., மாதத்திற்கு பிறகு நியமிக்கப்பட்ட தற்காலிக ஊழியர்களை பணியில் இருந்து விடுவிக்க வேண்டும். இவர்களை நியமனம் செய்தவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து மார்ச் 17 ல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை அன்றைய தினத்திற்கு ஒத்திவைத்தனர்.

மேலும்
-
கோவை வந்தார் அமித் ஷா
-
அமெரிக்காவில் அதிகரிக்கும் முட்டை கடத்தல்!
-
தொகுதி மறுசீரமைப்பு பற்றி முதல்வர் பேசுவது ஏன்: அண்ணாமலை கேள்வி
-
பிட்காயின் முதலீட்டு மோசடி: 60 இடங்களில் சி.பி.ஐ., சோதனை
-
மகா கும்பமேளாவில் டிஜிட்டல் குளியல்: பெண்ணின் செயல் வீடியோ வைரல்
-
மத்திய அமைச்சருடன் செல்பி : காங்கிரசை மீண்டும் கடுப்பாக்கிய சசிதரூர்