காவிரி ஆற்றின் குறுக்கே கதவணை அமைக்க வலியுறுத்தி போராட்டம்



காவிரி ஆற்றின் குறுக்கே கதவணை அமைக்க வலியுறுத்தி போராட்டம்


குளித்தலை,: குளித்தலை, காவிரி ஆற்றின் குறுக்கே மருதுார் முதல் உமையாள்புரம் வரும் வரை, கதவணை திட்டத்திற்கு நிதி ஒதுக்கி பணிகளை தொடங்க வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
குளித்தலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய குழு உறுப்பினர் சிவா தலைமை வகித்தார். உறுப்பினர்கள் பிரபாகர், ராஜேந்திரன், சசிகுமார் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் ஜோதிபாசு, ஒன்றிய செயலாளர் முத்துச்செல்வன் உள்பட பலர் பேசினர்.
கடந்த, அ.தி.மு.க., ஆட்சியில் மருதுார் காவிரி ஆற்றின் குறுக்கே, கதவணை அமைப்பதற்கான அனைத்து ஆய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு தயார் நிலையில் இருந்து வந்தது. ஆட்சி மாற்றம் ஏற்பட்டு தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்றவுடன், மருதுார் உமையாள்புரம் காவிரி ஆற்றின் குறுக்கே கதவணை கட்டுவதற்கு, 789 கோடி மதிப்பில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அறிவிக்கப்பட்ட திட்டம் ஓராண்டுக்கு பின்பு, நிதியின்மையால் கைவிடப்பட்டது.
இந்த திட்டம் அமைக்கப்பட்டால் குளித்தலை, முசிறி, ஸ்ரீரங்கம், மண்ணச்சநல்லுார் ஆகிய சட்டசபை தொகுதிக்குட்பட்ட பகுதிகளில், 44,000 ஏக்கர் மேல் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும். பருவ மழை காலங்களில், காவிரி ஆற்றில் வரும், 50 டி.எம்.சி.,க்கு மேல் உபரி நீரை சேமித்து விவசாயத்திற்கும் குடிநீருக்கும் பயன்படுத்த முடியும், கோடை காலங்களில் குடிநீர் பஞ்சம் வராமல் தடுக்க முடியும், நிலத்தடி நீர்மட்டம் உயரும்.
மறைந்த முதல்வர் கருணாநிதியின் முதல் தொகுதியான குளித்தலையில், அறிவிக்கப்பட்ட மருதுார் உமையாள்புரம் காவிரி ஆற்றின் குறுக்கே, கதவணை அமைக்க வரும் நிதியாண்டில் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என வலியுறுத்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கோஷம் எழுப்பினர்.

Advertisement