'புதிய தேசிய கல்வி கொள்கையால் மாணவர்கள் நன்மை அடைவர்' 

கோவை; கோவை விளாங்குறிச்சி ரோட்டில் உள்ள, ஸ்ரீதர்மசாஸ்தா மெட்ரிக் பள்ளியின், 34 வது ஆண்டுவிழா நேற்று நடந்தது. பள்ளியின் தலைவர் பாலசுப்ரமணியன் தலைமை வகித்தார்.

இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற, மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை இணை அமைச்சர் எல்.முருகன் பேசியதாவது:

2014ம் ஆண்டுக்கு முன்பு வரை பொருளாதார வளர்ச்சியில், 11வது இடத்தில் இருந்த இந்தியா, இன்றைக்கு உலக அளவில் ஐந்தவது இடத்தில் உள்ளது.

2027ம் ஆண்டில் இரண்டாவது இடத்திலும், 2047ம் ஆண்டில் முதல் இடத்திலும் இருக்கும். அதற்கான அடித்தளத்தை பிரதமர் மோடி உருவாக்கி கொண்டு இருக்கிறார்.

இந்தியாவில் முன்பு, 400 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள்தான் இருந்தன. இன்றைக்கு 1.20 லட்சம் நிறுவனங்கள் உள்ளன. இந்தியாவில் படிக்கும் இளைஞர்களை சிறந்த கல்வியாளர்களாகவும், தொழில் முனைவோர்களாகவும் ஆக்கும் நோக்கத்தில்தான், புதிய தேசிய கல்விக்கொள்கை கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்த கல்விமுறை, மாணவர்கள் மத்தியில் அறிவியல் அறிவையும், தொழில்நுட்ப அறிவையும் வளர்க்கும்.

எதிர்காலத்தில் விண்வெளி ஆராய்ச்சியில், இந்தியா முதன்மையான நாடாக விளங்கும்.

இவ்வாறு, அவர் பேசினார்.

Advertisement