மார்ச் 5 முதல் மாமூல் கிடையாது திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் 'கறார்'

துாத்துக்குடி:துாத்துக்குடி துறைமுகம் வழியாக வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்கள், சுங்கத்துறை உரிமம் பெற்ற தனியார் சரக்கு பெட்டகங்கள் கையாளும் நிறுவனங்கள் வாயிலாகவே அனுப்ப முடியும்.

வெளியூர்களில் இருந்து லாரிகளில் கொண்டு வரப்படும் பொருட்கள், அந்நிறுவன கிடங்குகளில் இறக்கி வைக்கப்பட்டு, உரிய அனுமதி பெற்ற பிறகு, கன்டெய்னரில் ஏற்றி துறைமுகத்திற்கு கொண்டு செல்வது வழக்கம்.

இந்நிலையில், திருப்பூரில் இருந்து ஜவுளி பார்சல்களை கொண்டு வரும் லாரி உரிமையாளர்களிடம், தனியார் சரக்கு பெட்டகம் கையாளும் நிறுவனத்தினர், எந்தவித ரசீதும் இல்லாமல் பணம் வசூலிக்கின்றனர்.

இறக்கு கூலி என்ற அடிப்படையில் ஒரு லாரிக்கு, 3,000 ரூபாய் வரை மாமூல் வசூலிப்பதால் தங்களுக்கு பொருளாதார இழப்பு ஏற்படுவதாக லாரி உரிமையாளர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

திருப்பூர் எக்ஸ்போர்ட் கார்கோ டிரான்ஸ்போர்ட்டர்ஸ் அசோசியேஷன் செயலர் மகேஷ்குமார், நிர்வாகி குமரேசன் கூறியதாவது:

'வரும் 5ம் தேதிக்கு பிறகு மாமூல் தொகை கொடுக்க முடியாது' என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம். இதனால் ஏற்றுமதி பாதிக்கப்படும்.

கேரளாவில் இதேபோன்ற நிலை முன்னர் இருந்தது. இருதரப்பினருக்கு இடையே சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்பட்ட பிறகே மாமூல் முறை கைவிடப்பட்டது.

சுங்கத்துறை அதிகாரிகளும், காவல்துறை அதிகாரிகளும் விசாரணை நடத்தி பிரச்னைக்கு முடிவு கட்ட வேண்டும். இல்லையென்றால் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement