வருமான வரி சோதனை நடக்கவில்லை மின் வாரியம் 

சென்னை:'மின் வாரிய தலைமை அலுவலகத்தில், எவ்வித வருமான வரி சோதனையும் நடக்கவில்லை' என, தமிழக மின் வாரியம் தெரிவித்துள்ளது.

சென்னை அண்ணா சாலையில் மின் வளாகம் உள்ளது. அங்கு, தமிழக மின் வாரியத்தின் மின் பகிர்மான கழகம், மின் உற்பத்தி கழகம், பசுமை எரிசக்தி கழகம், மின் தொடரமைப்பு கழகம் ஆகிய நிறுவனங்கள் செயல்படுகின்றன. இவற்றில் 3000க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணிபுரிகின்றனர்.

மின் வாரிய தலைமை அலுவலகத்திற்கு நேற்று காலை, 25 - 30 வருமான வரித் துறை அதிகாரிகள் சென்று, வாரிய செலவுகளில் வருமான வரி பிடித்தம் தொடர்பான சரிபார்ப்பு பணிகளை மேற்கொண்டிருந்தனர். பிற்பகலில், வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை செய்வதாக தகவல் பரவியது.

இதுகுறித்து, மின் வாரிய செய்திக்குறிப்பு:

தமிழக மின் வாரிய தலைமை அலுவலகத்தில், வருமான வரித் துறை இணை ஆணையர் தலைமையில், மின் வாரியத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு விதமான செலவினங்களில், உரிய வருமான வரி பிடித்தம் தொடர்பாக வழக்கமான சரிபார்ப்பு ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இது, ஒரு வழக்கமான அலுவலக நடைமுறை. மின் வாரிய தலைமை அலுவலகத்தில் எவ்வித வருமான வரி சோதனையும் நடக்கவில்லை. வருமான வரி சோதனை என்ற செய்தி தவறானது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement