குழந்தைகள் மொழி உரிமையை தி.மு.க., பறிக்கக்கூடாது

சிவகங்கை:சிவகங்கையில் புதிய தமிழகம் சார்பில் நடந்த இட ஒதுக்கீடு மீட்புக்கருத்தரங்கில் பங்கேற்ற அதன் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கூறியதாவது:

ஆறு தலைமுறைகளாக மாஞ்சோலை எஸ்டேட்டை வாழ்விடமாகக் கொண்ட மக்களை வெளியேறு என்று கூறுவது நியாயம் இல்லாத ஒன்று. மாஞ்சோலை எஸ்டேட்டில் புலிகளே கிடையாது. சிறுத்தைகள் மட்டுமே உள்ளன. தி.மு.க., அரசு தவறான நடைமுறைகளில் தான் ஈடுபட்டு வருகிறது. தி.மு.க., கடந்த தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை.

மாநிலத்திற்கு நிதி வழங்குவதில் மத்திய அரசு எந்த பாகுபாடும் காட்ட முடியாது. 40 எம்.பி.,க்களின் கண்களில் மண்ணைத் துாவிவிட்டு மத்திய அரசு நம்மிடம் பாகுபாடு காட்ட முடியாது. தமிழக மக்களின் கோபம் தமிழக அரசுக்கு எதிராக உள்ளது. அதை தமிழக அரசு மத்திய அரசுக்கு எதிராக மடைமாற்றும் வேலையை செய்கிறது.

தி.மு.க.,வினரின் குழந்தைகள் லண்டனில் படிப்பதற்கு ஒரு கிராமமே உருவாக்கியுள்ளனர். தி.மு.க.,வினர் ஊருக்கு மட்டுமே உபதேசம் செய்கின்றனர். அவர்கள் குழந்தைகள் மட்டும் அனைத்து மொழிகளையும் கற்றுக் கொள்ளலாம். ஏழை வீட்டு பிள்ளைகள் அனைத்தும் படிக்க கூடாதா. தி.மு.க.,வினரின் குழந்தைகள் மட்டும் சர்வதேச கல்வி படிக்கலாம். குழந்தைகள் எந்த மொழியை படிக்க வேண்டும் என்பதை அவர்களது பெற்றோர்கள் தான் முடிவு செய்யவேண்டும். அரசியல்வாதிகள் முடிவு செய்யக்கூடாது. அவர்கள் உரிமையை தி.மு.க.,வினர் பறிக்க கூடாது என்றார்.

Advertisement