ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் கூட்டாட்சிக்கு எதிரானது அல்ல

'லோக்சபா தேர்தலோடு சேர்த்து நாடு முழுதும் உள்ள சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது, எதிர்க்கட்சிகள் கூறுவதுபோல, ஜனநாயகத்திற்கு விரோதமானதும் இல்லை; கூட்டாட்சித் தத்துவத்துக்கு எதிரானதும் இல்லை' என, மத்திய சட்ட அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அரசு செலவினங்களை குறைக்கும் வகையில், லோக்சபாவுக்கும், நாடு முழுதும் உள்ள அனைத்து மாநில சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது.
எதிர்ப்பு
இதையடுத்து, ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு வழிவகுக்கும், 129வது அரசமைப்பு சட்டத்திருத்த மசோதாக்களை அதிரடியாக பார்லிமென்டில் தாக்கல் செய்தது. இதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.
இந்நிலையில், மத்திய சட்டத்துறை அமைச்சகத்திடமிருந்து, ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறைக்கு உறுதியான ஆதரவு கிடைத்துள்ளது.
அதன்படி, 'லோக்சபா தேர்தலோடு, நாடு முழுதும் உள்ள சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது ஜனநாயகத்துக்கு விரோதமான காரியம் அல்ல.
வரைவுக்குழு
அவ்வாறு ஒரு சேர தேர்தல் நடத்தினால், இந்தியாவின் கூட்டாட்சி தத்துவம் சீர்குலைந்துவிடப் போவதில்லை' என, சட்ட அமைச்சகத்தின் வரைவுக்குழு கருத்து தெரிவித்துள்ளது. மத்திய சட்ட அமைச்சகத்தின் இந்த ஆதரவு, மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது.
இதற்கிடையில், நாடு முழுதும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் முடிவு குறித்து, சட்ட நிபுணர்களுடன் கலந்து ஆலோசிக்கவும் பார்லிமென்ட் கூட்டுக்குழு முடிவு செய்துள்ளது.
நேற்று டில்லியில் நடந்த பா.ஜ., மூத்த எம்.பி., சவுத்ரி தலைமையிலான 39 உறுப்பினர்களைக் கொண்ட பார்லிமென்ட் கூட்டுக் குழு ஆலோசனைக் கூட்டத்தில், இந்த திட்டத்தின் உயர்மட்டக் குழுவின் செயலர் நிதின் சந்திரா, சட்டக் குழுவின் தலைவரான நீதிபதி ரித்து ராஜ் அவஸ்தி ஆகிய இருவரும் நேரில் வந்து தங்களது கருத்துகளை பதிவு செய்தனர்.
ஆக்கப்பூர்வமான அணுகுமுறை
நல்லமுறையில்ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அனைத்து உறுப்பினர்களும் அக்கறையுடன், அதேசமயம் ஆக்கப்பூர்வமான அணுகுமுறையையும் கொண்டிருந்தனர். இவர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு நீதிபதி அஸ்வதி உள்ளிட்டோர் உரிய விளக்கத்தை தந்தனர். இந்த விளக்கங்களை அனைத்து உறுப்பினர்களும் முழுமனதுடன் வரவேற்றனர். நாங்கள் அனைவரும் இந்த விஷயத்தில் ஒரு குழுவாக பணியாற்றி வருகிறோம்.
-பி.பி.சவுத்ரி, பார்லி., கூட்டுக்குழு தலைவர்.
- நமது டில்லி நிருபர் -
