வவ்வாலை சாப்பிட்ட 48 மணி நேரத்தில் உயிரிழப்பு: காங்கோவில் 53 பேர் பலி

கின்ஷாசா: காங்கோ நாட்டில் வவ்வாலை சாப்பிட்டதால் பரவிய நோய்க்கு இதுவரை, 53 பேர் பலியாகி உள்ளனர்.
மத்திய ஆப்ரிக்க நாடான காங்கோவின் போலோகோ நகரில் கடந்த ஜன., 21ல் மூன்று குழந்தைகள் வவ்வாலை சமைத்து சாப்பிட்டுள்ளனர். அதை சாப்பிட்ட 48 மணி நேரத்தில் நோய் பாதிப்புக்கு ஆளாகி அவர்கள் இறந்தனர். அவர்களிடம் இருந்து இந்த தொற்று மற்றவர்களுக்கும் பரவி இருக்கலாம் என கூறப்படுகிறது.
இது குறித்து ஆப்ரிக்காவில் உள்ள உலக சுகாதார நிறுவனம் வெளியிட்ட அறிக்கை:
விலங்குகளை உண்ணும் பகுதிகளில் அவற்றிலிருந்து மனிதர்களுக்கு புதிய நோய்கள் பரவுவது கவலைக்குரிய விஷயமாக உள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் ஆப்ரிக்காவில் இதுபோன்ற நோய் பரவல், 60 சதவீதத்திற்கு மேல் உயர்ந்துள்ளது.
தற்போது வவ்வாலை சாப்பிட்டதால் ஏற்பட்டுள்ள நோய் பரவலுக்கு இதுவரை 53 பேர் உயிரிழந்துள்ளனர். 419 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். காய்ச்சல், தலைவலி போன்ற அறிகுறிகள் தோன்றி, ரத்தநாளங்களில் கசிவு ஏற்பட்டு உயிரிழக்கின்றனர். நோய் அறிகுறி தென்பட்ட, 48 மணி நேரத்துக்குள்ளேயே பெரும்பாலான உயிரிழப்பு ஏற்படுவது, டாக்டர்களுக்க சவாலாக உள்ளது.
நோய் பாதித்த 13 பேரின் மாதிரிகள் காங்கோவின் தலைநகரான கின்ஷாசாவில் உள்ள தேசிய உயிரியல் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்திற்கு சோதனைக்காக அனுப்பப்பட்டன. அதில் எபோலா தொற்று இல்லை என உறுதியானது. சிலருக்கு மலேரியா பாதிப்பு இருப்பது தெரியவந்தது. தொடர்ந்து ஆய்வுகள் நடக்கின்றன. இவ்வாறு அவர்கள் கூறினர்.

