குற்றப்பிரிவில் 'குறை' பற்றாக்குறையால் திக்குமுக்காடும் போலீசார்

திருப்பூர்; திருப்பூர் மாநகரில் உள்ள குற்றப்பிரிவுகளில் சொற்ப இலக்கில் போலீசார் இருப்பதால், குற்றத்தடுப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொள்ள முடியாமல் போலீசார் திக்குமுக்காடி வருகின்றனர்.

திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனரக எல்லைக்குள் உள்ள எட்டு ஸ்டேஷன்களில் உள்ள குற்றப்பிரிவுகளில் இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ., உள்ளிட்ட சொற்ப இலக்கு எண்ணிக்கையில் தான் போலீசார் உள்ளனர்.

இருக்கும் ஒரு சில போலீசாரும் மருத்துவமனை, கோர்ட், தபால் டியூட்டி, சி.சி.டி.என்.எஸ்., மற்றும் சம்மன் வழங்குவது என, ஏதாவது பணியில் ஈடுபடுகின்றனர். இதுவிர, ஒன்று முதல், இரு போலீசார் விடுப்புகளில் செல்லும் போது, பணியில் இருக்கும் ஒவ்வொரு போலீசாரும் கூடுதலாக பணியை கவனிக்க வேண்டிய சூழலில் உள்ளனர்.

மேலும், இன்ஸ்பெக்டரும் பல்வேறு பணிகள் காரணமாக சென்னைக்கு மற்றும் வழக்கு விசாரணைக்கு கோர்ட்டுக்கு செல்வது போன்ற பணியில் செல்கின்றனர். ஸ்டேஷனில் இருக்க கூடிய போலீசார் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணியை கவனிக்க முடியாமல், ஸ்டேஷனுக்கு வர கூடிய மக்கள் புகார் பார்ப்பது, குற்றங்கள் ஏதாவது நடந்தால் சம்பவ இடத்துக்கு செல்வது, ரோந்து என பல பணிகளில் ஈடுபடுவது பெரும் சவாலாக உள்ளது. இப்பிரச்னை ஒரு நாள் மட்டுமல்ல தொடர்கதையாக உள்ளது.

திருப்பூர் நகரிலுள்ள ஒவ்வொரு ஸ்டேஷன் குற்றப்பிரிவுகளில் பாதிக்கு பாதியாக போலீஸ் பற்றாக்குறை உள்ளது. எனவே, போலீஸ் கமிஷனர் குற்றப்பிரிவுகளின் நிலைமை குறித்து நேரடியாக ஆய்வு மேற்கொண்டு போதிய போலீசார் வழங்குவது உடன், இளம் வயது எஸ்.ஐ.,க்களையும் பணி அமர்த்த வேண்டும். இல்லையெனில், புகார்களை விசாரிப்பதில் ஆரம்பித்து, குற்றங்களை கண்டறிவதில் சிக்கல் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

150 பேர் வேண்டும்



திருப்பூர் போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் கூறுகையில், ''கமிஷனரகமாக மாறியும் கூட, குற்றப்பிரிவு பழைய முறைப்படியே உள்ளது. பல இடங்களில் போலீஸ் தேவை இருக்கும் என்பதால், 150 போலீசாரை கேட்டுள்ளோம்.

இதற்கான ஒதுக்கீடு வழங்கும் போது, ஸ்டேஷன்களுக்கு பிரித்து வழங்கப்படும். 'ஹெவி' ஸ்டேஷன்களை கருத்தில் கொண்டு, தேவையான போலீசார் வழங்கப்பட்டுள்ளது,'' என்றார்.

Advertisement