அதிகரிக்கும் பேனர் கலாசாரத்தால் ஆபத்து

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டையில் அதிகாரிகளின் அலட்சியத்தால் மீண்டும் பேனர் கலாசாரம் கொடி கட்டி பறப்பதால் விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

அருப்புக்கோட்டையில் அரசு விதிமுறைகளை மீறி சந்திப்புகளில் பேனர் வைக்கும் கலாசாரம் மீண்டும் கொடிகெட்டி பறக்கிறது. இதனால் காற்று அடிக்கும் போது பேனர்கள் விழுந்து அபாயம் ஏற்படும் வாய்ப்புள்ளது.

அருப்புக்கோட்டையில் காந்திநகர் பகுதி சந்திப்பில் ரோட்டின் இரு பக்கங்களும் பேனர்கள் நீக்கமற நிறைந்து இருப்பதால் வளைவில் திரும்பும்போது, வாகனங்கள் தெரியாமல் விபத்து ஏற்படுகிறது. மேலும் சொக்கலிங்கபுரம் தனியார் பள்ளி அருகில் மெகா பேனர் வைத்துள்ளதால் அங்கும் விபத்து ஏற்படும் நிலை உள்ளது.

இவற்றை கட்டுப்படுத்த வேண்டிய நகராட்சி, போலீஸ் அதிகாரிகள், கண்டும் காணாமல் உள்ளனர். குறிப்பிட்ட நாட்களில் தான் பேனரை வைக்க வேண்டும் என்ற விதிகள் இருந்தும், நாள் கணக்கில் பேனர்களை எடுக்காமல் அப்படியே வைத்திருப்பதால் அவை காற்றில் விழுந்தும் சாய்ந்தும் விபத்திற்கு வழி வகுக்குகிறது.

அனுமதியின்றி பேனர் வைத்திருப்பவர்களுக்கு அதிகபட்சமாக 3 ஆண்டு சிறை தண்டனை, அல்லதுரூ.25 ஆயிரம் அபாராதம் விதிக்கலாம், ஆனால் அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியமாக இருப்பாதால் நகரில் அனுமதி பெறாமல் அதிகமான பேனர்கள் வைப்பது அதிகரித்து வருகிறது. அருப்புக்கோட்டை நகரில் பேனர்கள் வைப்பதற்கு கட்டுப்பாடு விதிக்க வேண்டும்.

Advertisement