வருஷநாடு கோவில்பாறை அருகே கரடி தாக்கி இருவர் பலி

4

கடமலைக்குண்டு: தேனி மாவட்டம் கோவில் பாறை அருகே கரடி தாக்கி இருவர் பலியாகினர்.



தேனி மாவட்டம் வருஷநாடு அருகே தங்கம்மாள்புரத்தை சேர்ந்தவர் மணி என்ற மணிகண்டன் 45, தர்மராஜபுரம் கிராமத்தைச் சேர்ந்த கருப்பையா 55, இருவரும் திருமணம் முடிந்து, இவர்களது மனைவிகள் இறந்த பின், கோவில்பாறை கண்மாய் அருகே உள்ள அவர்களது நிலத்தில் பல மாதங்களாக குடியிருந்து விவசாயம் செய்து வருகின்றனர்.
நேற்று இரவு 7 மணிக்கு சாரல் மழை பெய்தது. அப்போது மணிகண்டன் தோட்டத்தில் இருவரும் எலுமிச்சை பழங்கள் பறித்து இருசக்கர வாகனத்தில் ஏற்றுவதற்காக நடந்து வந்துள்ளனர். அப்போது அந்த வழியாக வந்த கரடி திடீரென கருப்பையா, மணிகண்டன் இருவரையும் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டனர்.



சம்பவ இடத்திற்கு வந்த கண்டனூர் வனத்துறையினர் மற்றும் கடமலைக்குண்டு போலீசார் இறந்து கிடந்த கருப்பையா, மணிகண்டன் இருவரின் உடல்களை பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


இது குறித்து கண்டமனூர் வனத்துறையினர் மற்றும் கடமலைக்குண்டு போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். கடமலைக்குண்டு வருஷநாடு பகுதியில் தொடர்ந்து கரடி தாக்கி பலர் இறந்து வருவதால் மலை கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் அச்சத்தில் உள்ளனர். மலை கிராம விவசாயிகளின் அச்சத்தைப் போக்க வனத்துறையினர் தீவிர நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.

Advertisement