4 ஆண்டில் நிறைவேற்றாததை 4 மாதத்தில் நிறைவேற்றுவாரா? ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பு ஆவேசம்

திருப்பூர்; கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற, ஜாக்டோ - ஜியோ உயர்மட்டக்குழு உறுப்பினர் அம்சராஜ் கூறியதாவது:

ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் கோரிக்கையை கேட்டு, நடவடிக்கை எடுக்க, நான்கு அமைச்சர் கொண்ட குழுவை முதல்வர் ஏற்படுத்தியுள்ளார். அவர்களும், ஜாக்டோ - ஜியோ தலைவர்களுடன் பேச்சு நடத்தி வருகின்றனர்.

கோரிக்கைகளை நிறைவேற்ற, 4 வார காலம் அவகாசம் தேவை என கேட்டுள்ளனர். நாங்கள் ஆட்சிக்கு வந்தால், பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வருவோம் என முந்தைய ஆட்சியின் போது, ஸ்டாலின் கூறியிருந்தார்.

ஆனால், அவர் முதல்வராகி, நான்காண்டு நிறைவு பெறும் நிலையிலும் அதை அமல்படுத்தாத அவர், நான்கு மாத காலம் அவகாசம் கேட்பது ஏற்புடையதல்ல.

சத்துணவு மற்றும் அங்கன்டிவாடி ஊழியர்கள், கிராம உதவியாளர்கள், ஊர்ப்புற நுாலகர்கள், எம்.ஆர்.பி., செவிலியர் உள்ளிட்ட லட்சக்கணக்கான ஊழியர்களுக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்காமல், உழைப்பு சுரண்டலுக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர்.

தமிழக அரசு, சமூக நீதி பேசி வரும் நிலையில், தொகுப்பூதிய அடிப்படையில் சத்துணவு பணியாளர்களை நியமிப்போம் என, முதல்வர் கூறுகிறார்.

ஆனால், கருணாநிதி முதல்வராக இருந்த போது, சத்துணவு ஊழியர்களுக்கு சிறப்பு காலமுறை ஊதியம் வழங்க உத்தரவிட்டார். வளர்ச்சியின் பின்னோக்கி செல்லும் விதமாக, முதல்வர் ஸ்டாலின் செயல்படுகிறார்.

இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement