கேரளாவுக்கு கடத்தப்படும் கனிம வளங்கள்; கருத்து கேட்பு கூட்டத்தில் குற்றச்சாட்டு

பல்லடம்; கேரளாவுக்கு தாராளமாக தமிழக கனிம வளங்கள் கடத்தி செல்லப்படுவதாக, கல்குவாரிக்கு அனுமதி வழங்குவது குறித்தான கருத்துக்கேட்பு கூட்டத்தில், விவசாயிகள் குற்றம்சாட்டினர்.

பல்லடம் ஒன்றியம், கோடங்கிபாளையம் கிராமத்தில் புதிய கல்குவாரிக்கு அனுமதி வழங்குவது குறித்த கருத்து கேட்பு கூட்டம், காரணம்பேட்டையில், நேற்று நடந்தது. ஆர்.டி.ஓ., மோகனசுந்தரம், திருப்பூர் தெற்கு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய கோட்ட பொறியாளர் சத்யன் ஆகியோர் தலைமையில் நேற்று நடந்தது.

சதீஷ்குமார் (செயலாளர், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம்):

கடுமையான சுற்றுச்சூழல் மாசு காரணமாக, விவசாயம் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. பெரும்பாலான கல்குவாரிகள் சட்ட விதிமுறைகளை பின்பற்றாமல் செயல்படுகின்றன. விதிமுறை மீறி செயல்பட்டு வரும் குவாரிகள் மீது அளிக்கப்பட்ட புகாருக்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சில குவாரிகளில் அனுமதிக்கப்பட்ட அளவைக் காட்டிலும் கூடுதலாக கனிம வளங்கள் எடுக்கப்பட்டு கேரளாவுக்கு நாள்தோறும் கடத்தி செல்லப்படுகின்றன. புதிய குவாரிக்கு அனுமதி கூடாது.

கார்த்திகேயன்: கட்டுமான பணிகளுக்கும், ரோடு உள்ளிட்ட பணிகளுக்காகவும் கல்குவாரி தொழில் மிக அவசியம். உரிய விதிமுறைகளுக்கு உட்பட்டு அனுமதி அளிக்கலாம்.

செல்வி: ஏற்கனவே உள்ள சில குவாரிகள் விதிமுறை மீறி இயங்கி வருகின்றன. ஆய்வு செய்யாமல் அனுமதி வழங்கப்படுகிறது. நீங்கள் ஆய்வு செய்யாமல் அனுமதி கொடுத்துவிட்டு சென்று விடுகிறீர்கள். இதனால், விவசாயிகளாகிய நாங்கள் தான் பாதிக்கிறோம்.

கலைச்செல்வி: விதிமுறை மீறிய குவாரிகள் மீது அளிக்கப்பட்ட புகாருக்கே இன்னும் நடவடிக்கை இல்லை. எங்கு பார்த்தாலும் கொலை நடப்பது அச்சமாக உள்ளது. புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளாகிய நீங்கள்தான் இவற்றுக்கு முழு காரணம்.

முகிலன் (சுற்றுச்சூழல் பாதுகப்பு இயக்கம்): விதிமுறைப்படி பெரும்பாலான குவாரிகள் செயல்படுவதில்லை. தற்போது அனுமதி கோரியுள்ள குவாரிக்கு அருகில், வீடுகள், அரசால் கட்டிக்கொடுக்கப்பட்ட வீடுகளும் உள்ளன.

இப்பகுதியில் வெட்டி எடுக்கப்படும் கனிம வளங்கள், தமிழகத்துக்கு மட்டுமே பயன்படுவதில்லை.அண்டை மாநிலமான கேரளாவுக்கு தான் சட்ட விரோதமாக செல்கின்றன. எனவே, குவாரிக்கு அனுமதி வழங்கக்கூடாது.

பழனிசாமி (முன்னாள் ஊராட்சி தலைவர்): கல்குவாரி தொழில் இன்று மிகவும் அவசியம். விவசாயம் பொய்த்துப் போன காலகட்டத்தில் குவாரி தொழில்தான் இப்பகுதிக்கு கைகொடுத்தது. விதிமுறைகளை பின்பற்றி அனுமதி வழங்கலாம்.

இவ்வாறு, விவசாயிகள், பொதுமக்கள் தங்களது கருத்துகளை கூறினர்.

Advertisement