இது ரொம்ப தவறுங்க...! மொழி அரசியல் செய்யக்கூடாது; அன்புமணி

5

சென்னை: 'மொழி அரசியல் செய்யக்கூடாது. இது தவறானது. தமிழகத்தின் கொள்கையை மாற்ற சொல்ல மத்திய அரசுக்கு உரிமை கிடையாது' என பா.ம.க., தலைவர் அன்புமணி தெரிவித்தார்.


இது குறித்து நிருபர்கள் சந்திப்பில் அன்புமணி கூறியதாவது: மக்கள் தொகை அடிப்படையில் பார்லிமென்டில் பிரதிநிதித்துவம் இருக்கும் வகையில், வரும் ஆண்டு மறுசீரமைப்பு செய்யப்பட இருக்கிறது. அப்போது தமிழக அரசுக்கு தொகுதி குறையும் என்ற அச்சம் நிலவுகிறது. இந்த அச்சத்தை போக்க மத்திய அரசு முயற்சி செய்ய வேண்டும்.



தமிழகத்திற்கு மட்டுமல்ல, தென் மாநிலங்களில் மறுசீரமைப்பு செய்யும் திட்டத்தின் படி, மக்கள் தொகை அதிகமாக உள்ள மாநிலங்களுக்கு தொகுதி அடிப்படையில் லோக்சபா தொகுதி அதிகரிக்கப்படும் என்று ஒரு செய்தி இருக்கிறது. இந்த செய்தி இன்னும் உறுதியாக இல்லை. இது ஒரு தவறான போக்கு. தமிழகத்தின் உரிமைகளை இழக்க கூடாது. இந்தியாவின் கொள்கை மக்கள் தொகையை குறைக்க வேண்டும் என்பது தான்.


இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் மார்ச் 5ம் தேதி நடக்க உள்ள அனைத்து கட்சிக் கூட்டத்தில் பா.ம.க., பங்கேற்கும். புதிய கல்வி கொள்கையை ஏற்றால் தான் தமிழகத்திற்கு நிதி கொடுப்போம் என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் வலியுறுத்தி வருகிறார். இது ஒரு தவறான போக்கு. எந்த மாநிலத்திலும் மத்திய கொள்கையை திணிக்க கூடாது. கல்வி பொதுப்பட்டியலில் இருக்கிறது. மத்திய அரசு சட்டம் கொண்டு வந்தால் ஏற்பதும், மறுப்பதும் மாநில அரசு உரிமை.


நீங்கள் ஏற்றுக்கொண்டு தான் ஆக வேண்டும் என்று வலியுறுத்த கூடாது. தமிழகத்தில் 60 ஆண்டுகளாக இருமொழி கொள்கையை பின்பற்றி வருகிறது. எந்த மொழியை வேண்டுமென்றாலும் கற்றுக்கொள்ளலாம், ஆனால் திணிக்கக் கூடாது. மொழி அரசியல் செய்யக்கூடாது. இது தவறானது. தமிழகத்தின் கொள்கையை மாற்ற சொல்ல மத்திய அரசுக்கு உரிமை கிடையாது.


தமிழுக்காக தி.மு.க., என்ன செய்துள்ளது? நீங்கள் மொழிப்போர் வைத்து தான் ஆட்சிக்கு வந்தீர்கள். நீங்கள் அரசு பள்ளிக்கு முக்கியத்துவம் கொடுத்து நிதி ஒதுக்கி இருக்க வேண்டும். கல்வியை வியாபாரம் ஆக்கியது தி.மு.க.,தான். இவ்வாறு அன்புமணி கூறினார்.

Advertisement