ராகுலை மக்கள் புறக்கணிக்க வேண்டும்: ராம்தாஸ் அத்வாலே

மும்பை: கும்பமேளாவில் பங்கேற்காத காங்கிரஸ் தலைவர் ராகுல் மற்றும் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவை மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே வலியுறுத்தியுள்ளார்.

உத்தரபிரதேசம் மாநிலம் பிரயாக்ராஜில் கடந்த 45 நாட்களாக நடந்து வரும் மகா கும்பமேளா இன்றுடன் நிறைவு பெறுகிறது. இதுவரையில் அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் பொதுமக்கள் என 62 கோடிக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இந்த கும்பமேளாவில் கலந்து கொண்ட நிலையில், காங்கிரஸ் எம்.பி., ராகுல் பங்கேற்காதது குறித்து மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே விமர்சித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது; ஹிந்துத்துவா பற்றி சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே அதிகம் பேசுவார். ஆனால், பிரயாக்ராஜில் நடந்து வரும் கும்பமேளாவில் அவர் பங்கேற்கவில்லை. காங்கிரஸ் தலைவர் ராகுலும் கலந்து கொள்ளவில்லை. தாக்கரே மற்றும் காந்தி குடும்பத்தினர், மகா கும்பமேளாவில் பங்கேற்காமல், ஹிந்துத்துவாவை அவமதித்து விட்டனர்.

ஹிந்துவாக இருந்து கொண்டு கம்பமேளாவில் பங்கேற்காமல் இருப்பது ஹிந்துக்களை அவமதிக்கும் செயலாகும். ஹிந்துக்களின் ஓட்டுக்கள் மட்டும் அவர்களுக்கு வேண்டும். ஹிந்து மக்கள் கட்டாயம் அவர்களை புறக்கணிக்க வேண்டும், இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement