ஈஷா மஹாசிவராத்திரி விழா பக்தியின் மஹாகும்பமேளா ; உள்துறை அமைச்சர் அமித் ஷா புகழாரம்!

கோவை: “ஈஷா மஹாசிவராத்திரி விழா பக்தியின் மஹாகும்பமேளா” போன்று நடைபெறுகிறது என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா புகழாரம் சூட்டினார்.
கோவை ஈஷா யோக மையத்தில் மஹாசிவராத்திரி விழா இன்று (பிப்.,26) நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாபேசியதாவது: சத்குருவின் அழைப்பை ஏற்று ஆதியோகி தரிசனம் பெறுவதிலும், மகாதேவரின் மகத்துவத்தை வெளிப்படுத்தும் மஹாசிவராத்திரி விழாவில் பங்கேற்பதை பெரும் பேறாக கருதுகிறேன்.
இன்று ஆன்மீகத்தில் சோமநாத்திலிருந்து கேதார்நாத் வரை, பசுபதிநாத்திலிருந்து ராமேஸ்வரம் வரை, காசியிலிருந்து கோவை வரை முழு பாரதமும் சிவபெருமானின் திருவருளில் திளைத்துக் கொண்டிருக்கிறது. பிராயாக்ராஜ்ஜில் மஹா கும்பமேளா நிறைவு பெறுவதை சுட்டும் வகையில் ஈஷாவில் மஹாசிவராத்திரி விழா பக்தியின் கும்பமேளாவாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
சத்குரு உருவாக்கியிருக்கும் இந்த இடம் பக்திக்கான இடமாக மட்டுமல்லாமல் யோகம், ஆத்ம சாதனை, பக்தி, தன்னை உணர்தல் ஆகியவற்றிற்கான இடமாக இருக்கிறது. ஈஷா பல லட்சம் உயிர்களை யோகா மற்றும் தியானத்தின் மூலமாக நெறிப்படுத்தி, சரியான சிந்தனையை விதைத்து சரியான பாதையில் செல்ல உலகெங்கும் வழிகாட்டி கொண்டிருக்கிறது.
இளைஞர்களையும், ஆன்மீகத்தையும் இணைப்பதில் சத்குரு மகத்தான பங்கை ஆற்றி இருக்கிறார்கள். மிகுந்த ஞானம் கொண்டதும், அதே நேரத்தில் தர்க பூர்வமானதுமான முறையில் கருத்துகளை இளைஞர்களிடம் கொண்டு சேர்த்திருக்கிறார்கள். நம்முடைய சத்குருவை நான் வர்ணிக்க வேண்டுமென்றால் "ஒரு லட்சியத்தோடு இயங்கிக் கொண்டிருக்கிற ஞானி" என வர்ணிக்க வேண்டும். உலகத்தை மாற்ற வேண்டும் என்றால் முதலில் உங்களை மாற்ற வேண்டும் என்பதை சத்குரு உணர்த்தி வருகிறார்.
சத்குரு மேற்கொண்ட மண் காப்போம் இயக்கத்தின் போது அவரோடு நானிருந்தேன். சத்குருவைப் பற்றி நான் பணிவோடு சொல்லி கொள்கிறேன், நீங்கள் இந்த பாரத தேசத்திற்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம். மகரிஷி திருமூலர் ஞானிகளின் அடையாளமாக, தீவிரமான தவத்தின் மூலம் சைவ மரபில் திருமந்திரம் எனும் 3000 அற்புத பாடல்களை அருளியிருக்கிறார்.
அந்த வரிசையில் மகத்துவமான மற்றொரு உதாரணம் மகரிஷி அகத்தியர், அவர் சனாதனத்தின் பல்வேறு பரிமாணங்களை வெளிப்படுத்திய ஞானி. தமிழ் பண்பாட்டில் சிவ வழிபாட்டிற்கு சிறப்பான இடம் உண்டு. சத்குருவின் மஹாசிவராத்திரியை பற்றி கேள்வி பட்டிருக்கிறேன். இன்று நேரில் கலந்து கொண்ட பிறகு உலகித்திற்கே நான் சொல்ல விரும்புவது இது மிகவும் மகத்தான ஆச்சரியமான நிகழ்வு.
சத்குரு இந்த மஹாசிவராத்திரியை ஆன்மீக விஞ்ஞானத்தின் அடிப்படையாக கொண்டு ஞானத்தையும், அறிவியலையும் இணைக்கின்ற அற்புதத்தை செய்திருக்கிறார். இவ்வாறு அவர் பேசினார்.
ஈஷா மஹாசிவராத்திரி விழாவிற்கு அனைவரையும் வரவேற்று சத்குரு பேசியதாவது: உள்துறை அமைச்சர் ஒரு விதத்தில், சர்தார் வல்லபாய் பட்டேல் செய்ததை போல நாட்டை ஒன்றாக கொண்டு வந்திருக்கார். காஷ்மீரை நம் இந்தியாவின் பாகமாக கொண்டு வந்து இருக்கிறார். காஷ்மீர் சிறப்புச் சட்டம் 370 நீக்கம் மூலம் அந்த பகுதி இயல்பு நிலைக்கு திரும்பி இருக்கிறது. தற்போது லட்சக்கணக்கான மக்கள் காஷ்மீருக்கு சுற்றுலா செல்கிறார்கள். நாட்டின் இறையாண்மை மற்றும் சட்டம் ஒழுங்கை சரியாக கவனிக்கவில்லை என்றால், கல்வி, தொழிநுட்பம், ஆன்மீகம், பொருளாதாரம் உள்ளிட்டவைகள் வீணாகிப் போகும். நம் மத்திய அமைச்சருக்கு நன்றி.
இன்று மஹாசிவராத்திரி எந்த ஜாதி, மதம், பாலினத்தவராக இருந்தாலும் உயிர் சக்தி மேல் எழுவதற்கான நாள். ஒரு புகழ்பெற்ற ஊடகவியலாளர் என்னிடம் முஸ்லீம், கிறிஸ்துவர்கள் மஹாசிவராத்திரிக்கு வரலாமா எனக் கேட்டார், அதற்கு நான் கூறியது முஸ்லீம், கிறிஸ்துவர்கள் குறிப்பாக இந்துக்கள் யாரும் வர முடியாது. மனிதர்கள் மட்டுமே மஹாசிவராத்திரிக்கு வர முடியும் என பதிலளித்தேன். இது மனித குலத்திற்கான கொண்டாட்டம். நீங்கள் மனிதராக இருந்து உங்கள் முதுகெலும்பு நிமிர்ந்து இருந்தால் ஆதியோகி உங்களுக்கானவர். ஆதியோகி வருங்காலத்திற்கான நம்பிக்கையை வழங்குகிறார். ஆதியோகி நாட்டின் பல்வேறு இடங்களில் வர உள்ளார். இவ்வாறு அவர் பேசினார்.
ஆதியோகி முன்பு உருவாக்கப்பட்டு இருந்த கயிலாய மலை போன்ற அரங்கமைப்பு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இதனைத் தொடர்ந்து மிராக்கிள் ஆப் தி மைண்ட் செயலியை சத்குரு வெளியிட்டார்.
ஈஷா யோக மையத்திற்கு மாலை வந்தடைந்த அமித் ஷாவை சத்குரு சூர்ய குண்ட மண்டபம், நாகா சன்னதி, லிங்க பைரவி சன்னதி மற்றும் தியானலிங்கம் உள்ளிட்ட இடங்களில் தரிசனம் செய்ய அழைத்து சென்றார். தியானலிங்கத்தில் நடைபெற்ற பஞ்ச பூத கிரியாவிலும் அமித் ஷா அவர்கள் கலந்து கொண்டார்.

மேலும்
-
திருமழிசை சாலையோரம் வீணாகும் மின்கம்பங்கள்
-
ஞானசேகரனிடம் திருட்டு நகைகளை வாங்கிய வியாபாரி கைது
-
சோழவரத்தில் ரோடு ரோலர் திருடி லாரியில் ஏற்றிச்சென்ற மூவர் கைது
-
ஏரிகளில் நீர் இருப்பு கருவி பொருத்த விவசாயிகள் காத்திருப்பு முதற்கட்டமாக 13 இடங்களுக்கான பணிகள் சுணக்கம்
-
சிவாலயங்களில் மஹா சிவராத்திரி விழா விமரிசை பக்தர்கள் வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம்
-
ஆம்னி பஸ் ஸ்டாண்ட் பராமரிப்பு; நிபந்தனைகள் விதித்தது மாநகராட்சி