ஏரிகளில் நீர் இருப்பு கருவி பொருத்த விவசாயிகள் காத்திருப்பு முதற்கட்டமாக 13 இடங்களுக்கான பணிகள் சுணக்கம்

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டத்தில் நீர்வளத்துறை முதற்கட்டமாக, 13 ஏரிகளில் நீர் இருப்பை தெரிவிக்கும் நவீன கருவியை நீர்வள ஆதாரத்துறையினர் பொருத்த உள்ளனர். ஏரிகளில் அறைகள் மட்டுமே கட்டிய நிலையில், கருவியை எப்போது பொருத்துவர் என, விவசாயிகள் பல மாதங்களாக காத்திருக்கின்றனர்.
காஞ்சிபுரம், வாலாஜாபாத், குன்றத்துார், ஸ்ரீபெரும்புதுார், உத்திரமேரூர் ஆகிய ஐந்து தாலுகாக்களில், நீர்வள ஆதாரத்துறை கட்டுப்பாட்டில், 381 ஏரிகள் உள்ளன.
தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழையின் போது, நீர்வள ஆதாரத்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் ஏரிகள் நிரம்பினால், 50,000 மேற்பட்ட ஏக்கரில், விவசாயிகள் நெல் சாகுபடி செய்து வருகின்றனர்.
இதில், தென்னேரி, உத்திரமேரூர் உள்ளிட்ட சில முக்கியமான ஏரிகளில் மட்டுமே, ஏரி நீரின் இருப்பு விபரங்களை அளவீடு செய்ய முடிகிறது. மற்ற ஏரிகளில், நீர்மட்டத்தின் அளவு சரியான அளவு தெரிந்துக் கொள்ள முடியவில்லை. தோராய கணக்கீடாகவே உள்ளது.
இதனால், பாசனத்திற்கு தேவையான தண்ணீர் கிடைக்குமா என, விவசாயிகள் மத்தியில் குழப்பம் ஏற்படுகிறது. இந்த சிரமத்தை தவிர்க்கும் வகையில், அனைத்து விதமான ஏரிகளின் நீர் இருப்பு விபரத்தை தெரிந்துக் கொள்ளும் விதமாக, டிஜிட்டல் அளவீடு செய்யும் கருவிகள் பொருத்தப்பட உள்ளன.
இந்த கருவி, ஏரி நீரின் அளவை பதிவு செய்து, செயற்கைக்கோளுக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
முதற்கட்டமாக, காஞ்சிபுரம் தாலுகாவில், வேளியூர், வளத்துார் ஆகிய இரு ஏரிகளும், ஸ்ரீபெரும்புதுார் தாலுகாவில் கொளத்துார், குண்டுபெரும்பேடு, அமரம்பேடு, வல்லக்கோட்டை, பேரீஞ்சம்பாக்கம், வளர்புரம், ஸ்ரீபெரும்புதுார், பிள்ளைப்பாக்கம் உள்ளிட்ட 13 ஏரிகளில், நீர் இருப்பு விபரம் பதிவு செய்யும் கருவிகள் பொருத்தப்பட உள்ளன.
இந்த பணிக்கு, அந்தந்த ஏரிகளின் பிரதான மதகுகளின் மீது, கட்டுப்பாட்டு கருவி பொருத்துவதற்கு, நவீன அறைகள் கட்டி முடிக்கப்பட்டு உள்ளன. ஒவ்வொரு அறை கட்டுமான பணிக்கும், தலா 2 லட்சம் ரூபாய் வீதம், 26 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து, கட்டுமான பணிகள், கடந்தாண்டு செப்டம்பர் மாதம் பணிகள் நிறைவு பெற்றுள்ளன.
இருப்பினும், கருவிகள் பொருத்தப்படவில்லை. இதனால், பல லட்சம் ரூபாய் செலவு செய்து கட்டிய கட்டடமும் பயன்பாடின்றி வீணாகி வருகின்றன. கோடைக்காலத்தில் ஏரி நீர் இருப்பு விபரம் தெரிந்துக் கொள்ள முடியாமல் உள்ளது.
இதுகுறித்து காஞ்சிபுரம் மாவட்ட விவசாயிகள் கூறியதாவது:
வடகிழக்கு பருவமழையால், பெரும்பாலான ஏரிகள் நிரம்பி இருக்கும். இந்த தண்ணீரை, நவரை பருவ பாசனத்திற்கு திறந்துவிட்டால், பருவம் நிறைவு பெறும் மார்ச் மாத வரை, ஏரி நீர் பாசனத்திற்கு செல்லும்.
நவரைக்கு அடுத்தபடியாக ஏப்ரல் மாதம் துவங்கும் சொர்ணவாரி பருவத்திற்கு, ஏரியில் உள்ள நீர் இருப்பு விபரம் மற்றும் பாசன வசதி பெறும் விவசாய நிலம் ஆகியவற்றை கணக்கீடு செய்து தண்ணீர் திறக்கலாம்.
நீர் இருப்பு விபரம் தெரிவிக்கும் மற்றும் செயற்கைக்கோளுக்கு அனுப்பும் கருவி பொருத்தாததால், நீர் இருப்பு விபரம் தெரிந்து கொள்ள முடியாமல் உள்ளது. மழைக்காலங்களில் உபரிநீரை வெளியேற்ற முடியாத நிலையும் உருவாகும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
சிறிய ஏரிகளில், நீர் இருப்பு விபரம் தெரிவிக்கும் நவீன அறை கட்டும் பணி நிறைவு பெற்றுள்ளன. ஏரி நீர் இருப்பு விபரம், செயற்கைக்கோளுக்கு பதிவு செய்யும் கருவி இன்னும் பொருத்தவில்லை. இந்த பணிக்கு தமிழகம் முழுதும் ஒட்டுமொத்தமாக டெண்டர் விடப்பட்டுள்ளது. கருவிகள் பொருத்தும் பணி விரைவில் துவக்கப்படும். மழைக்காலம் துவங்குவதற்கு முன் பணிகள் நிறைவுபெறும்.
நீர்வளத் துறை அதிகாரி,
காஞ்சிபுரம்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில், வடகிழக்கு பருவமழைக்கு ஏரி நிரம்பினால், ஒரு பருவம் மட்டுமே நெற்பயிருக்கு தண்ணீர் பாய்ச்ச முடியும். தென்னேரி, துாசி - மாமண்டூர் ஏரி, மதுராந்தம் ஏரி உள்ளிட்ட பெரிய ஏரிகள் வாயிலாக, நவரை பவரும் மட்டுமல்லாமல், சொர்ணவாரி பருவத்திற்கும் நெல் சாகுபடி செய்வது வழக்கம். இதுபோன்ற ஏரிகளில் சரியாக நீர் மேலாண்மை செய்யப்படுகிறது. மற்ற ஏரிகளில் முறையான நீர் மேலாண்மை இல்லை. ஏரி நீரை பலரும் முறைகேடாக வீணடிக்கின்றனர். உதாரணமாக, அதிகாரிகளுக்கு தெரியாமல் மீன்பிடிக்க தண்ணீரை திறந்து விடுகின்றனர். அதுபோன்ற சமயங்களில் அதிகாரிகளுக்கு தெரியாமல் போவதால், தண்ணீர் வீணாகிறது. ஏரிகளில் நவீன கருவி பொருத்துவதன் வாயிலாக, பாசனம் இன்றி தண்ணீர் திறந்தாலும், ஏரி முழுமையாக நிரம்பினாலும், அதிகாரிகளுக்கு எச்சரிக்கை ஒலி வாயிலாக 'அலெர்ட்' செய்யும்.
மேலும்
-
மாணவிக்கு டார்ச்சர் வாலிபர் மீது போக்சோ
-
ரூ.3.50 கோடி செம்மர கட்டைகள் பறிமுதல் ரூ.1 கோடியில் வீடு கட்டிய புரோக்கருக்கு வலை
-
நீலகிரியில் டைப்ரைட்டிங் தேர்வு மையம் டி.என்.பாளையம் மாணவியர் முறையீடு
-
அடுத்த ஆண்டு இ.பி.எஸ்., முதல்வர் அ.தி.மு.க.,வினர் உறுதிமொழி ஏற்பு
-
மேட்டூர் நீர்வரத்து திடீரென அதிகரிப்பு
-
இரட்டிப்பு பணம் தருவதாக மோசடி வழக்கு விசாரணை அதிகாரி மாற்றம்