திறமையான இந்திய மாணவர்கள் வேண்டுமா? அமெரிக்க நிறுவனங்களுக்கு டிரம்ப் யோசனை

வாஷிங்டன் :'நல்ல திறமையுள்ள இந்திய மாணவர்களை வேலைக்கு எடுப்பதில் குடியுரிமை உங்களுக்கு பிரச்னையாக உள்ளதா; அரசின் 'கோல்டு கார்டை' இந்திய மாணவர்களுக்கு வாங்கி கொடுத்து, அவர்களை வேலைக்கு சேர்த்துக் கொள்ளலாம்' என, அமெரிக்க நிறுவனங்களுக்கு அந்த நாட்டின் அதிபர் டொனால்டு டிரம்ப் யோசனை தெரிவித்துஉள்ளார்.
கோல்டு கார்டு
அமெரிக்க அதிபராக கடந்த மாதம் பதவியேற்ற டொனால்டு டிரம்ப், வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவுக்கு வருவது தொடர்பாக ஒரு திட்டத்தை நேற்று முன்தினம் அறிவித்தார். தற்போது, அமெரிக்காவில் தங்கி, வேலை பார்ப்பதற்கு, 'கிரீன் கார்டு' அந்தஸ்து அளிக்கப்படுகிறது.
ஆனால், இதற்காக அமெரிக்காவில் குறிப்பிட்ட காலம் தங்கியிருக்க வேண்டும். அதன்பிறகே கிரீன் கார்டு கிடைக்கும்.
ஆனால், 41.5 கோடி ரூபாய் செலுத்தினால், கிரீன் கார்டில் உள்ள அனைத்து உரிமைகளும் வழங்கும், கோல்டு கார்டு அறிமுகம் செய்வதாக டிரம்ப் அறிவித்துள்ளார். ஆனால், பெரும் பணக்காரர்களால் மட்டுமே இந்தளவுக்கு செலவிட முடியும் என்ற கருத்து உள்ளது.
இதற்கிடையே, நல்ல திறமையுள்ளவர்களை வேலைக்கு எடுத்துக் கொள்வதில் சில சிக்கல்கள் உள்ளதாக அமெரிக்க நிறுவனங்கள் கூறுகின்றன.
குறிப்பாக, அமெரிக்க பல்கலை.,களில் படிக்கும், இந்தியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த திறமையுள்ள மாணவர்களுக்கு, கிரீன் கார்டு எப்போது கிடைக்கும் என்பதில் நிச்சயமில்லை. அதனால், அவர்களை வேலைக்கு எடுக்க முடியவில்லை என்று, அமெரிக்க நிறுவனங்கள் கூறுகின்றன.
---நாட்டுக்கு சேவை
இந்நிலையில், அதிபர் டொனால்டு டிரம்ப் நேற்று கூறியுள்ளதாவது:
நம் நாட்டின் பல்கலைகளில் இந்தியா, ஜப்பான், சீனா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த நல்ல திறமையுள்ள மாணவர்கள் படிக்கின்றனர்.
படிப்பில் முதலிடத்தைப் பெறும் மாணவர்களுக்கு, குடியுரிமை தொடர்பான பிரச்னை இருப்பதால், அமெரிக்க நிறுவனங்களில் சேர முடிவதில்லை. இதனால், அவர்கள் தங்களுடைய சொந்த நாட்டுக்கே சென்று விடுகின்றனர்.
அங்கு அவர்கள் பெரிய அளவில் சாதிக்கின்றனர். இதுபோன்ற நல்ல திறமையுள்ள மாணவர்கள் நம் நாட்டுக்கு தேவை.
இதுபோன்ற மாணவர்களை வேலைக்கு எடுக்கும்போது, அமெரிக்க நிறுவனங்கள் அவர்களுக்கு கோல்டு கார்டுகளை வாங்கித் தரலாம். இதனால், நல்ல திறமையுள்ள இந்தியர்கள் உள்ளிட்டோர் இங்கேயே இருப்பர்.
இதற்காக அமெரிக்க நிறுவனங்கள் செலவிடும் தொகை, நம் நாட்டின் கடனை அடைக்க உதவும். அந்த வகையிலும் நாட்டுக்கு சேவையாற்ற முடியும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
மேலும்
-
புதிய கல்விக் கொள்கை அமல்படுத்தும் தேவை உள்ளது; சொல்கிறார் கவர்னர் ரவி
-
சாம்பியன்ஸ் டிராபியில் மோசமான தோல்வி; பாக்., வீரர்களுக்கு ரத்தாகும் சலுகைகள்?
-
இன்றும் தங்கம் விலை ரூ.400 சரிவு; ஒரு சவரன் ரூ.63,680!
-
நடிகை பாலியல் புகாரில் மாலை 6 மணிக்கு விசாரணைக்கு ஆஜராகிறார் சீமான்
-
கருவில் குழந்தை பாலினத்தை கண்டறிந்த விவகாரம்; அரசு டாக்டர் உட்பட 9 பேர் சஸ்பெண்ட்
-
திருச்சியில் ரூ.1.22 கோடி மதிப்பு தங்கம் பறிமுதல்; கடத்தியது 'குருவி'யா என விசாரணை