பேரீச்சம் பழத்துக்குள் தங்கம் கடத்தி வந்த நபர் சிக்கினார்

புதுடில்லி,டில்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் பேரீச்சம் பழங்களுக்குள் மறைத்து கடத்தி வரப்பட்ட 172 கிராம் அளவு தங்கத்தை சுங்க அதிகாரிகள் நேற்று பறிமுதல் செய்தனர்.

மேற்காசிய நாடான சவுதி அரேபியாவின் ஜெட்டாவிலிருந்து, 56 வயது நபர் நேற்று முன் தினம் டில்லி சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தார்.

'ஸ்பாட் புரொபைலிங்' முறையில் அவரை சந்தேகத்திற்குரிய நபராக சுங்கத்துறையினரின் கணினி வகைப்படுத்தியது.

இதையடுத்து, அவரின் உடைமைகள் அனைத்தையும் சுங்க அதிகாரிகள் எக்ஸ்ரே பரிசோதனைக்கு உட்படுத்தினர். அதில், அவர் எடுத்து வந்த பேரீச்சம் பழங்களில் உலோகங்கள் இருப்பது தெரியவந்தது.

பழங்களை ஒரு தட்டில் கொட்டி பிரித்து பார்த்த போது, அதன் உள்ளே தங்க துண்டுகள் மற்றும் ஒரு சங்கிலி இருந்தன.

கைப்பற்றப்பட்ட தங்கத்தின் எடை 172 கிராம். அதன் சந்தை மதிப்பு 15 லட்சம் ரூபாய் என சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதே போல் தாய்லாந்தில் இருந்து டில்லி விமான நிலையம் வந்த இரு பெண்கள் தங்கள் உடைமைகளுக்குள், 27 கிலோ கஞ்சாவை கடத்தி வந்தனர்.

அதன் மதிப்பு 27 கோடி ரூபாய். அவர்கள் இருவரையும் கைது செய்த சுங்கத் துறையினர் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

Advertisement