பொள்ளாச்சி டூ சென்னைக்கு ஆம்னி பஸ் ஓட்டும் பெண்; அதீத ஆர்வத்தால் டிரைவரான ஆசிரியை

உடுமலை; பொள்ளாச்சியில் இருந்து சென்னைக்கு ஆம்னி பஸ் ஓட்டி, அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார் கனிமொழி.
திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே பூலாங்கிணர் பகுதியைச் சேர்ந்தவர் கனிமொழி. எம்.ஏ., - பி.எட்., பட்டதாரியான இவர், தனியார் பள்ளி ஆசிரியையாக பணிபுரிந்தார். தற்போது இவர்,தமிழகத்தின் முதல் ஆம்னி பஸ் பெண் டிரைவராக மாறியுள்ளார். பொள்ளாச்சி முதல் சென்னை வரை, தன் சொந்த ஆம்னி பஸ்சை ஓட்டி வருகிறார்.
இது குறித்து கனிமொழி கூறியதாவது: பள்ளி பருவம் முதலே சாதிக்க வேண்டும் என்ற நோக்கில், கல்வி, விளையாட்டில் சிறப்பிடம் பெற்றுவந்தேன். குடும்ப வாழ்விற்கு வந்ததும், பள்ளி ஆசிரியையாக பணியாற்றிய நிலையில், பி.இ., படித்து, சுய தொழில் செய்த கணவர் கதிர்வேலுக்கு உதவியாக நிறுவனத்தை கவனித்து வந்தேன். தொலைதுாரத்துக்கு வாகனம் ஓட்டுவதில் ஆர்வம் இருந்ததால், திருச்செந்துார் உள்ளிட்ட கோயில்களுக்கு சென்றபோது, நானும், கணவரும் மாறி மாறி கார் ஓட்டி வந்தோம்.
வாகனம் ஓட்டுவதில் ஆர்வம் அதிகரித்த நிலையில், கணவருக்கும் ஆம்னிபஸ்கள்இயக்க வேண்டும் என்ற ஆர்வம் இருந்தது. இதனால், இருவரும் 'ஹெவி டிரைவிங் லைசென்ஸ்' பெற்று, இரண்டு ஆம்னி பஸ்களைவாங்கினோம். 'அழகன் டிராவல்ஸ்' என்ற பெயரில், ஜனவரி முதல்எங்கள் பஸ்கள் இயக்கப்படும் நிலையில், மாற்று டிரைவருக்கு பதில் அவ்வப்போது ஆம்னிபஸ் ஓட்டினேன். கடந்த 15 நாட்களாக முழுமையாக ஓட்டி வருகிறேன்.
பஸ்சில், 50 பயணியர் வரை இருக்கும் நிலையில், அவர்களின் பாதுகாப்பை உணர்ந்தும், சரியான நேரத்திற்கு செல்ல வேண்டும் என்பதால், ஆரம்பத்தில் சற்று சிரமமாக இருந்தது. எதையும் சாதிக்க வேண்டும் என்ற எண்ணமும், துணிச்சலும் இருந்ததால், சிரமம் தற்போது பெரிதாக தெரியவில்லை.
சாலையில் செல்லும் போது, பயணியர் வரும் பஸ் என்பதை உணராமல், சிலர் வேண்டுமென்றே மது அருந்திவிட்டும், சாகசம் செய்வதற்காக பைக், கார் உள்ளிட்டவற்றை தாறுமாறாக இயக்குவதும் தான் வருத்தமாக உள்ளது.
ஒரு பெண் பஸ் இயக்குவதை பார்க்கும் பயணியர் சிலர், நேர்மறை, எதிர்மறை விமர்சனங்களை வைத்துள்ளனர். இரவு முழுதும் இயக்கும் போது, பஸ்சில் பயணம் செய்தவர்கள் இறங்கி செல்லும் போது, நான் டிரைவிங் சீட்டில் இருப்பதை ஆச்சரியமாக பார்த்து, என்னை பாராட்டியும்செல்கின்றனர்.
எங்களுக்கு 8 மற்றும் 4 வயதில் இரு குழந்தைகள் உள்ளனர். அவர்களை, 'மிஸ்' பண்ணுகிறேன். என் கணவர், பெற்றோர், நண்பர்கள், உறவினர்கள் உற்சாகம் அளித்து வருகின்றனர். எந்த துறையிலும், ஆண், பெண் பேதமில்லை. அனைத்து துறைகளிலும் பெண்கள் சாதிக்கலாம் என்ற எண்ணம் கொள்ள வேண்டும். இவ்வாறு கூறினார்.




மேலும்
-
புதிய கல்விக் கொள்கை அமல்படுத்தும் தேவை உள்ளது; சொல்கிறார் கவர்னர் ரவி
-
சாம்பியன்ஸ் டிராபியில் மோசமான தோல்வி; பாக்., வீரர்களுக்கு ரத்தாகும் சலுகைகள்?
-
இன்றும் தங்கம் விலை ரூ.400 சரிவு; ஒரு சவரன் ரூ.63,680!
-
நடிகை பாலியல் புகாரில் மாலை 6 மணிக்கு விசாரணைக்கு ஆஜராகிறார் சீமான்
-
கருவில் குழந்தை பாலினத்தை கண்டறிந்த விவகாரம்; அரசு டாக்டர் உட்பட 9 பேர் சஸ்பெண்ட்
-
திருச்சியில் ரூ.1.22 கோடி மதிப்பு தங்கம் பறிமுதல்; கடத்தியது 'குருவி'யா என விசாரணை