பிரதமரின் பட்டப்படிப்பு சான்றிதழ்: கோர்ட்டில் காட்ட பல்கலை தயார்

18

புதுடில்லி : 'பிரதமர் நரேந்திர மோடியின் பட்டச் சான்றிதழ் தொடர்பான ஆவணங்களை நீதிமன்றத்தில் காட்டுவதற்கு தயாராக உள்ளோம். ஆனால், மற்றவர்களுக்கு காண்பிக்க முடியாது' என, டில்லி உயர் நீதிமன்றத்தில் டில்லி பல்கலை தெரிவித்துள்ளது.


பிரதமர் நரேந்திர மோடியின் பட்டப் படிப்பு தொடர்பாக சர்ச்சை எழுந்தது. இது தொடர்பாக நீரஜ் என்பவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த, சி.ஐ.சி., எனப்படும் மத்திய தகவல் கமிஷன், 2016ல் பிறப்பித்த உத்தரவில், '1978ல் பட்டப் படிப்பு முடித்த அனைவரது தகவல்களையும் அளிக்க வேண்டும்' என, உத்தரவிட்டது.


இதை எதிர்த்து டில்லி உயர் நீதிமன்றத்தில் டில்லி பல்கலை வழக்கு தொடர்ந்தது. 'தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், மற்றத் தகவல்களை தருவதற்கு தயாராக உள்ளோம். ஆனால், பாதுகாப்பு கருதி பிரதமர் குறித்த தகவல்களை அளிக்க முடியாது' என, டில்லி பல்கலை கூறியது.



இந்த வழக்கை விசாரித்த, டில்லி உயர் நீதிமன்றம், தலைமை தகவல் ஆணையத்தின் உத்தரவுக்கு, 2017ல் தடை விதித்தது. இது தொடர்பாக தொடரப்பட்ட மற்ற வழக்குகளிலும் தீர்ப்புகளை ஒத்தி வைத்தது.



இந்நிலையில், இந்த வழக்கு டில்லி உயர் நீதிமன்றத்தில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது டில்லி பல்கலை சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா தன் வாதத்தின்போது, டில்லி பல்கலையில், 1978ல் பிரதமர் பி.ஏ., பட்டம் பெற்றார். இது தொடர்பான ஆவணங்களை நீதிமன்றத்தில் காட்டுவதற்கு தயாராக உள்ளோம்.


அதே நேரத்தில் பாதுகாப்பு கருதியும், பிரதமரின் தனிநபர் சுதந்திரம் கருதியும், இந்தத் தகவல்களை மற்றவர்களுக்கு தர முடியாது, என, குறிப்பிட்டார். இதைத் தொடர்ந்து, வழக்கின் தீர்ப்பை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்தது.

Advertisement