மதுரை சித்திரைத்திருவிழா ஏப்.29ல் கொடியேற்றத்துடன் துவக்கம்; மே 12ல் கள்ளழகர் ஆற்றில் இறங்குகிறார்

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில், கள்ளழகர் கோயில் சித்திரைத் திருவிழா மே மாதம் நடக்கிறது.

மீனாட்சி அம்மன் கோயிலில் திருவிழா கொடியேற்றம் ஏப்.,29 நடக்கிறது. மே 10 வரை நடக்கும் இத்திருவிழாவில் அம்மனுக்கு மே 6 மாலை பட்டாபிேஷகம் நடக்கிறது. மறுநாள் அம்மன் மாசி வீதிகளில் திக் விஜயம் செல்கிறார். அதை தொடர்ந்து மே 8ல் மீனாட்சி திருக்கல்யாணம் நடக்கிறது. இதை காண கோயில் நிர்வாகம் சார்பில் ஆன்லைன் முன்பதிவு மே முதல் வாரத்தில் துவங்குகிறது. அன்றிரவு அம்மன் பூப்பல்லக்கில் வீதி உலா வருகிறார். மே 9 அதிகாலை மாசிவீதியில் இருந்து சுவாமி, அம்மன் தேர்கள் ஆடி அசைந்து வரும் தேரோட்டம் நடக்கிறது.

மீனாட்சி அம்மன் கோயிலில் இத்திருவிழா நிறைவுற்றதும், மே 10 அழகர்கோவிலில் இருந்து கள்ளழகர் அலங்காரத்தில் சுந்தரராஜ பெருமாள் பல்லக்கில் மாலை புறப்படுகிறார். மே 11ல் மூன்றுமாவடி உள்ளிட்ட பகுதிகளில் அழகரை வரவேற்கும் விதம் எதிர்சேவை நடக்கிறது.

இத்திருவிழாவின் முத்தாய்ப்பாக மே 12ல் தங்கக்குதிரையில் புறப்பட்டு வைகையாற்றில் கள்ளழகர் எழுந்தருளுகிறார். அன்று மதியம் மதிச்சியம் ராமராயர் மண்டபத்தில் தீர்த்தவாரி உற்ஸவம் நடக்கிறது.

இரவு வண்டியூர் வீரராகவப்பெருமாள் கோயிலுக்கு செல்கிறார். மறுநாள் சேஷ வாகனத்தில் புறப்பட்டு வைகை தேனுார் மண்டபத்தில் எழுந்தருளி கருடவாகனத்தில் மண்டூக முனிவருக்கு சாபவிமோசனம் கொடுக்கிறார். அன்றிரவு ராமராயர் மண்டபத்தில் விடிய விடிய தசவாதாரம் அலங்காரம் நடக்கிறது.

Advertisement