5 ரயில் நிலையங்களில் ஐ.ஆர்.சி.டி.சி., உணவகம்

4

சென்னை : திருவண்ணாமலை, விருத்தாசலம் உட்பட ஐந்து ரயில் நிலையங்களில், தனியார் பங்களிப்புடன் உணவகங்களை அமைக்க, ஐ.ஆர்.சி.டி.சி., திட்டமிட்டுள்ளது.


இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் எனப்படும் ஐ.ஆர்.சி.டி.சி., சார்பில், ரயில் மற்றும் விமானத்தில் சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்யப்படுகின்றன. இது தவிர, முக்கிய ரயில் நிலையங்களில், தனியார் பங்களிப்போடு உணவகங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.

இது குறித்து, ஐ.ஆர்.சி.டி.சி., அதிகாரிகள் கூறியதாவது:



பயணியர் வருகை அதிகமாக இருக்கும் ரயில் நிலையங்களை ஆய்வு செய்து, தேவைக்கு ஏற்ப, தனியார் நிறுவனங்களின் பங்களிப்போடு, உணவகங்களை அமைத்து வருகிறோம். தற்போது, புதிதாக நடுத்தர ரயில் நிலையங்களில், சிறிய உணவகங்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.


அதன்படி, திருவண்ணாமலை, விருத்தாசலம், சென்னையில் மயிலாப்பூர், வேளச்சேரி, பழவந்தாங்கல் ஆகிய ரயில் நிலையங்களில்,. ஐ.ஆர்.சி.டி.சி., சார்பில் உணவகங்கள் அமைக்கப்படும். இதற்கான, 'டெண்டர்' வெளியிடப்பட்டுள்ள நிலையில், விரைவில் ஒப்பந்ததாரர்கள் தேர்வு செய்யப்படுவர். பின்னர், ஒன்பது ஆண்டுகளுக்கு உணவகங்கள் வைக்க அனுமதிக்கப்படும். சைவம், அசைவ உணவுகள் நியாயமான விலையில் விற்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement