தேசிய தொழில் நுட்ப கழகத்தில் ரூ.32 கோடியில் புதிய கட்டடங்கள் மத்திய இணை அமைச்சர் திறந்து வைப்பு

காரைக்கால்: காரைக்கால் தேசிய தொழில் நுட்ப கழகத்தில் நடந்த விழாவில், ரூ.31.9 கோடி மதிப்பில் புதிய ஊழியர்கள் குடியிருப்பு மற்றும் ஆய்வகத்தை, மத்திய இணை அமைச்சர் சுகந்த மஜூம்டர் திறந்து வைத்தார்.

காரைக்கால் தேசிய தொழில் நுட்பக்கழகத்தில் 15வது நிறுவன தின விழா நேற்று நடந்தது. தொழில்நுட்ப கழக இயக்குனர் மகரந்த் மதவோ கங்ரேக்கர் வரவேற்றார். மத்திய கல்வித்துறை இணை அமைச்சர் சுகந்த மஜூம்டர் தலைமை வகித்து, அங்கு ரூ.30 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள புதிய ஊழியர் குடியிருப்பு மற்றும் ரூ.1.9 கோடி செலவில் கட்டியுள்ள ஆய்வகத்தை திறந்து வைத்து, சிறப்புரையாற்றினார். அமைச்சர் திருமுருகன், விஞ்ஞானி டில்லிபாபு முன்னிலை வகித்தனர்.

விஞ்ஞானி டில்லிபாபு, தொழில் நுட்ப கண்டுபிடிப்புகள் மற்றும் தேசிய வளர்ச்சியில், அதற்கான முக்கியத்துவம் குறித்த தகவல்களை பகிர்ந்துகொண்டார். இயக்குனர் மகரந்த் மதவோ கங்ரேக்கர், என்.ஐ.டி. நிறுவனத்தின் வளர்ச்சி, சாதனைகள் மற்றும் எதிர்கால திட்டங்களை விளக்கினார். பின், தேர்வு செய்யப்பட்ட கழகத்தின் ஆசிரியர்கள் செந்தில்குமார், மஹாபத்ரா, ராஜுபாகுபாலேந்திருனி, கோவிந்தராஜ், லட்சுமி சுதா ஆகியோருக்கு, ஆராய்ச்சியாளர் அங்கீகார விருதுகளை, மத்திய இணை அமைச்சர் வழங்கினார்.

விழாவில், பதிவாளர் சுந்தரவரதன், கலெக்டர் சோமசேகர் அப்பாராவ், சீனியர் எஸ்.பி.,லட்சுமி சௌஜன்யானா மற்றும் பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர்.

Advertisement