போக்குவரத்து விதிமீறலில் நடவடிக்கை: 80,496 ஓட்டுநர் உரிமங்கள் முடக்கம்

சென்னை: தமிழகத்தில் கடந்த ஆண்டில் மட்டும், போக்கு வரத்து விதிமீறல்களில் ஈடுபட்ட, 80,496 பேரின் ஓட்டுனர் உரிமங்கள் முடக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து ஆணையரகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, தமிழக போக்குவரத்து ஆணையரக அதிகாரிகள் கூறியதாவது: தமிழகத்தில் கடந்த ஆண்டு நிலவரப்படி, 3.70 கோடிக்கும் மேற்பட்ட வாகனங்கள் ஓடுகின்றன. இதில், இரு சக்கர வாகனங்கள் மட்டும், 3 கோடியே, 90,744. வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, இரு சக்கர வாகனங்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது.
கொரோனா பாதிப்புக்கு பின், சொந்த வாகனங்களில் பயணிப்பது அதிகரித்துள்ளது. போக்குவரத்து விதிமீறல்களுக்கு ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்பட வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல் அடிப்படையில், நடவடிக்கை எடுத்து வருகிறோம். அதன்படி, கடந்த ஆண்டில் மட்டும், 80,496 ஓட்டுநர் உரிமங்கள், தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளன.
இதில் சிக்னலில் நிற்காமல் சென்றவர்கள் 20,818 பேர்; மொபைல் போன் பேசியபடி வாகனம் ஓட்டியவர்கள், 19,498; அதிவேகத்தில் வாகனங்களை இயக்கியவர்கள், 18,589; மது போதையில் வாகனம் ஓட்டியவர்கள், 9,402 பேர் அடங்குவர். இது தவிர, அதிக பாரம் ஏற்றிய வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையை விட அதிகளவில் பயணியரை ஏற்றிய, 6,956 வாகனங்கள்; அதிக சரக்கு ஏற்றிய, 5,233 வாகனங்கள் மீது நடவடிக்கை எடுத்து, ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
அதுபோல், 13 வயது முதல் 16 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் வாகனங்கள் ஓட்டுவதை கண்டறிந்து, அவர்களின் பெற்றோரை அழைத்து அறிவுரை வழங்கி வருகிறோம். சிறுவர்களின் நலன் கருதி, அவர்களை எச்சரித்து அனுப்பி வைக்கிறோம். அனைத்து பள்ளிகளிலும், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறோம். சிறுவர்கள் வாகனங்களை ஓட்டி வருவதை தடுக்க, பள்ளி நிர்வாகம் கண்காணிக்கவும் அறிவுறுத்தி உள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.






மேலும்
-
புதிய கல்விக் கொள்கை அமல்படுத்தும் தேவை உள்ளது; சொல்கிறார் கவர்னர் ரவி
-
சாம்பியன்ஸ் டிராபியில் மோசமான தோல்வி; பாக்., வீரர்களுக்கு ரத்தாகும் சலுகைகள்?
-
இன்றும் தங்கம் விலை ரூ.400 சரிவு; ஒரு சவரன் ரூ.63,680!
-
நடிகை பாலியல் புகாரில் மாலை 6 மணிக்கு விசாரணைக்கு ஆஜராகிறார் சீமான்
-
கருவில் குழந்தை பாலினத்தை கண்டறிந்த விவகாரம்; அரசு டாக்டர் உட்பட 9 பேர் சஸ்பெண்ட்
-
திருச்சியில் ரூ.1.22 கோடி மதிப்பு தங்கம் பறிமுதல்; கடத்தியது 'குருவி'யா என விசாரணை