ஷோரூமில் புதிய காரை எடுத்தபோது சாலையில் பாய்ந்து கவிழ்ந்து விபத்து மாணவி, வாலிபர் படுகாயம்

அரியாங்குப்பம்: புதுச்சேரியில் ஷோரூமில் இருந்து, புதிய காரை எடுத்த போது ஏற்பட்ட விபத்தில், பள்ளி மாணவி உட்பட இருவர் மீது கார் மோதி, கவிழ்ந்தது.

அரியாங்குப்பம், கடலுார் சாலையில் தனியார் கார் விற்பனை ஷோரூம் உள்ளது. அங்கு, புதிய காரை வாங்குவதற்கு முன்பதிவு செய்த வாடிக்கையாளர் ஒருவர், நேற்று மாலை அந்த காரை வாங்கி செல்ல வந்தார். அப்போது, ஷோரூம் ஊழியர்கள், காரை எடுத்து படைத்து பூஜை போட்ட பின், கார் சாவியை கார் வாங்கிய நபரிடம் கொடுத்தனர்.

அப்போது, அந்த நபர் காரை எடுக்க முயன்றபோது, கியரில் இருந்த கார், திடீரென சாலையில் பாய்ந்தது. அந்த நேரத்தில் நோணாங்குப்பம் நோக்கி, தனது தந்தையின் ஸ்கூட்டியில் உட்கார்ந்து சென்ற, தனியார் பள்ளி மாணவி மீது கார் மோதியது. தொடர்ந்து, சாலை டிவைடர் கட்டையில் ஏறி, கார் கவிழ்ந்தது. கார் கண்ணாடி உடைந்து சேதமடைந்தது.

அப்போது, எதிர் சாலையில் நோணாங்குப்பத்திலிருந்து புதுச்சேரி நோக்கி பைக்கில் சென்ற வாலிபர் மீது, கார் மோதியது.

இந்த விபத்தில், மாணவி, வாலிபர் இருவரும் படுகாயமடைந்தனர். அங்கிருந்தவர்கள், இருவரையும் மீட்டு, அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதனால், கடலூர் சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தகவலறிந்த தெற்கு பகுதி போக்குவரத்து போலீ சார், இந்த விபத்து குறித்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement